மாருதியின் இடத்தை தட்டி தூக்க ஹூண்டாய் முடிவு பண்ணிருச்சு! விலை குறைவான 3 காரை அடுத்த வருஷம் களமிறக்க பிளான்!
இந்தியாவின் முன்னணி கார் பிராண்டாக மாருதி சுஸுகி இருக்கின்றது. இதற்கு நிறுவனத்தின் வசம் இருக்கும் பன்முக கார் மாடல்கள் மலிவு விலையைக் கொண்டதாக இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. இதன் விளைவாகவே ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் முதல் இடத்தில் உள்ளன.
இந்த இடத்தை நீண்ட காலமாக மாருதி சுஸுகியே ஆக்கிரமித்து வருகின்றது. இந்த இடத்தை பிடிக்க ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் மிகக் கடுமையாக செயலாற்றி வருகின்றன. இருப்பினும், அந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடியாத சூழலே உள்ளது. நடப்பாண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கின்றது. இந்த ஆண்டில் பிடிக்க முடியாத இடத்தை அடுத்த ஆண்டிலாவது பிடிக்கலாம் என இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை மாருதி சுஸுகியின் போட்டியாளர்கள் வகுத்துள்ளனர்.

அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனம் மிக சிறப்பான திட்டங்களைப் போட்டிருக்கின்றது. கட்டாயம் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளராக மாறுவதற்கான செயல்பாட்டில் அது களமிறங்கி உள்ளது. இதன் அடிப்படையில் மிக சூப்பரான கார் மாடல்ளை இந்திய சந்தையில் களமிறக்க அது திட்டமிட்டு உள்ளது. விலைக் குறைவான மூன்று அசத்தலான கார் மாடல்களையே ஹூண்டாய் 2023 இல் களமிறக்க பிளான் பேட்டிருக்கின்றது. அந்த கார்கள் என்ன மாதிரியான சிறப்புகளுடன் வர இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி:
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அமோகமான வரவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு டிமாண்ட் மிக அமோகம். இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் டாடா பஞ்ச் ஆகிய கார் மாடல்கள் உள்ளன. இவற்றிற்கு வரவேற்பு பன்மடங்கு அதிகம். இந்த சந்தையை குறி வைத்தே ஹூண்டாய் நிறுவனம் ஓர் புதுமுக மைக்ரோ எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இதன் வருகை 2023 ஆம் ஆண்டிலேயே அரங்கேற இருக்கின்றது. இந்த மைக்ரோ எஸ்யூவி ரக கார் அளவில் சிறியதாக இருந்தாலும் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்கும் வசதியுடன் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனத்தை ஹூண்டாய் நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடலான கிராண்ட் ஐ10 நியாஸை தயாரித்து வரும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே கட்டமைக்க இருக்கின்றது.
ஆகையால், ஹூண்டாய் ஐ10 நியாஸ் போலவே அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக இந்த பெயரிடப்படாத மைக்ரோ எஸ்யூவி கார் சந்தையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மைக்ரோ எஸ்யூவி பஞ்ச் போன்ற அளவில் சிறிய அளவு கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. ஆகையால் இதன் விலை மிக மிக குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்:
ஹூண்டாய் நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி காரை மட்டுமே அடுத்த ஆண்டில் இந்தியாவில் களமிறக்க திட்டமிடவில்லை. இந்நிறுவனம் பன்முக அப்டேட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் கிராண்ட் ஐ10 நியாஸ் காரையும் 2023 இல் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரில் அப்டேட்டின் அடிப்படையில் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, காரின் ஸ்டைலை மாற்றும் வகையில் சிறப்பு அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. முன் பக்க கிரில், பம்பர், புதிய எல்இடி டிஆர்எல் லைட்டுகள் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது.
இதுபோன்ற மாற்றங்களுடனேயே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ மோட்டர் ஆகிய இரு எஞ்ஜின் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படும். இத்துடன், தற்போது வழங்கப்படுவதைப் போலவே சிஎன்ஜி தேர்வும் 2023 கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் அவுரா:
ஹூண்டாய் நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் கிராண்ட் ஐ10 நியாஸ் காரின் அப்டேட் வெர்ஷனை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்போவதில்லை. இந்நிறுவனம், அதன் பிரபல செடான் ரக காரான அவுராவின் அப்டேட் வெர்ஷனையும் அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரிலும் அப்டேட்டின் அடிப்படையில் சில சிறப்பு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, வெளிப்புறத்தில் லேசான அலங்கார மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் செடானின் முகப்பு பகுதியிலும், பின் பகுதியிலும் மாற்றங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த மாற்றங்கள் 2023 அவுராவுக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கும். ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் இந்த காரில் எந்த மாற்றத்தையும் ஹூண்டாய் மேற்கொள்ளாது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மோட்டார் ஆகிய தேர்வுகளிலேயே 2023 அவுரா விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் மாருதி சுஸுகியின் டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் ஆகிய காம்பேக்ட் செடான்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








