ரூ.5 லட்சத்தில் புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் ஹூண்டாய்... டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டி!
ரூ.5 லட்சத்தில் புதிய மினி எஸ்யூவி வகை காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் டாடா பன்ச் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் மிக வலுவான சந்தை இருக்கிறது. எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை தக்க வைக்கும் விதமாக புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் முனைப்பில் இருக்கிறது.

இதற்கு தக்கவாறு புதிய மாடல்களை கொண்டு வரும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. இதில், மிக முக்கிய மாடலாக ரூ.5 லட்சத்தில் புதிய எஸ்யூவி ஒன்றும் இடம்பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த எஸ்யூவி Ai3 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவியை உருவாக்கி அறிமுகம் செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டையும் ஹூண்டாய் செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ செய்தி கூறுகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட காஸ்பர் மைக்ரோ எஸ்யூவியின் அடிப்படையில் இந்தியாவுக்காக சில மாற்றங்களுடன் புதிய பெயரில் இந்த மினி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

ஹூண்டாய் ஐ10 நியோஸ் காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தேர்வுகள் இதிலும் வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. புதிய மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும்.

அதேபோன்று, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வரும். இந்த எஞ்சினுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது.

தென்கொரியாவில் அறிமுகமாகி இருக்கும் ஹூண்டாய் காஸ்பர் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 8 அங்குல இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவிங் மோடுகள், வென்டிலேஷன் வசதியுடன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 ஏர்பேக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்தியாவில் விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக சில வசதிகள் குறைக்கப்படலாம்.

டாடா பன்ச் காருக்கு மட்டுமின்றி, ரெனோ கைகர், மஹிந்திரா கேயூவி100, மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளிட்ட குறைவான விலை கொண்ட எஸ்யூவி கார்களுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








