தரமான சம்பவத்தை செய்த ஹூண்டாய்... கை மேல் பலன் கெடச்சிருக்கு... வாயை பிளக்கும் போட்டியாளர்கள்!
ஹூண்டாய் நிறுவனத்திற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்டேட் செய்யப்பட்ட 2022 ஹூண்டாய் டூஸான் (2022 Hyundai Tucson) கார் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலை 27.7 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) ஆகிய கார்களுடன் 2022 ஹூண்டாய் டூஸான் கார் போட்டியிடும்.

2022 ஹூண்டாய் டூஸான் காரில் லெவல் 2 அடாஸ் (LEVEL 2 ADAS) வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த வசதியை பெற்றுள்ள முதல் ஹூண்டாய் கார் என்ற பெருமையை 2022 டூஸான் தனதாக்கியுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு அப்டேட்களையும் 2022 டூஸான் காரில் ஹூண்டாய் நிறுவனம் செய்துள்ளது. இதன் காரணமாக ஹூண்டாய் டூஸான் காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 343 டூஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 117 டூஸான் கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் டூஸான் கார் விற்பனையில் 193 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. வருடாந்திர ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியில் பார்த்தாலும் ஹூண்டாய் டூஸான் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூலை மாதம் ஹூண்டாய் நிறுவனம் 170 டூஸான் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதத்தில் 343 ஆக உயர்ந்துள்ளது. இது 102 சதவீத வளர்ச்சியாகும். டூஸான் காரின் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ததற்கு, ஹூண்டாய் நிறுவனத்திற்கு கை மேல் பலன் கிடைத்திருப்பது இந்த புள்ளி விபரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

பிளாட்டினம் (Platinum) மற்றும் சிக்னேச்சர் (Signature) என ஹூண்டாய் டூஸான் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என ஹூண்டாய் டூஸான் கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 156 ஹெச்பி பவர் மற்றும் 192 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 186 ஹெச்பி பவர் மற்றும் 416 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய ஹூண்டாய் டூஸான் காரின் டிசைன் நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சொகுசான கேபினும் வழங்கப்பட்டுள்ளது. எனவே புதிய ஹூண்டாய் டூஸான் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

டிசைனை பொறுத்தவரையில் 2022 ஹூண்டாய் டூஸான் கார், புதிய க்ரில் அமைப்பு மற்றும் ஷார்ப்பான எல்இடி லைட்களை பெற்றுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், பெரிய சன்ரூஃப் உள்பட ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து அப்டேட்களும், ஹூண்டாய் டூஸான் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வதற்கு உதவி செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதே கையோடு வெனியூ காரின் என் லைன் மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமல்லாது வரும் மாதங்களில் இன்னும் நிறைய கார்களையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Kona Facelift) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதுதவிர க்ரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications