'த்ரில்லிங்' வேணும்னா இப்பவே புக் பண்ணுங்க... ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலுக்கு முன்பதிவு தொடங்கியது!
ஹூண்டாய் நிறுவனம் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் என் லைன் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். இதன் 'என் லைன்' மாடலை (Hyundai Venue N Line) ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்பாக வெனியூ 'என் லைன்' மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலை வாங்க விருப்பம் உள்ளவர்கள் 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் மூலமாகவோ வெனியூ என் லைன் மாடலை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கு பிறகு இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது என் லைன் மாடல் என்ற பெருமையை வெனியூ என் லைன் பெறுகிறது.

ஹூண்டாய் வெனியூ காரின் ரெகுலர் மாடலை விட சற்று அதிகமான விலையில் என் லைன் மாடல் விற்பனை செய்யப்படும். இந்த அதிகமான விலைக்கு ஏற்ப தோற்றம் மற்றும் செயல்திறனில், ஹூண்டாய் வெனியூ என் லைன் பல்வேறு அப்டேட்களை பெற்றிருக்கும். ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருப்பது தொடர்பாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான அன்சூ கிம் (Unsoo Kim) பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கடந்த 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ஹூண்டாய் வெனியூ என் லைன் அறிமுகத்தின் மூலம், இந்திய வாடிக்கையாளர்களின் 'ஃபன் டிரைவிங்' எஸ்யூவி அனுபவத்தை உயர்த்துவோம்'' என்றார்.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முதலில் என் லைன் மாடலை அறிமுகம் செய்த ஐ20 காரானது, பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. தற்போது இரண்டாவதாக என் லைன் மாடலை அறிமுகம் செய்யவுள்ள வெனியூ காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. எனவே எஸ்யூவி ரகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் மாடலை வாங்க காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷன்.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலில், 1.0 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் இரண்டாவது தலைமுறை 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படும்.

ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் 'த்ரில்' ஆன, அதே நேரத்தில் நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தை பெற முடியும். ஹூண்டாய் வெனியூ காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மாடல் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடல் இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 6ம் தேதி (September 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம்தான் இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வமான விலையை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அறிவிக்கும். அதற்காக வாடிக்கையாளர்கள் பலர் காத்து கொண்டுள்ளனர்.

வெனியூ என் லைன் மாடல் தவிர, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் புத்தம் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் ஆகிய புதிய தயாரிப்புகளையும் ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார்களும், நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.


Click it and Unblock the Notifications








