வென்யூ மாடலிலும் புதியதாக என்-லைன் வேரியண்ட்டா!! அதிரடி முடிவில் ஹூண்டாய்!
ஐ20 ஹேட்ச்பேக் காரினை தொடர்ந்து வென்யூ சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரின் புதிய என்-லைன் வேரியண்ட்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யக்கூடிய பிராண்ட்களுள் ஒன்றாக ஹூண்டாய் விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், சில மாதங்களுக்கு முன்பு வரையில் நம்பர்.1 எஸ்யூவி பிராண்டாக விளங்கியது. இந்த பட்டத்தினை சமீப மாதங்களாக டாடா மோட்டார்ஸ் பெற்று வருகிறது. ஹூண்டாயின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்று வென்யூ ஆகும்.

வென்யூவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த தென்கொரிய நிறுவனம் அறிமுகப்படுத்த தயாராகி வருவது நமக்கு தெரிந்த விஷயமே. தென்கொரிய நாட்டில் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவரும் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை மாதிரிகளை சமீபத்தில் நமது இந்தியாவில் கூட பார்க்க முடிந்தது. இந்த நிலையில் வென்யூவின் புதிய ஸ்போர்டியர் வெர்சனாக என்-லைன் வேரியண்ட்டையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் தயாராகி வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இது புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் இருக்கும் ஐ20 என்-லைன் காரை போன்று, புதிய வென்யூ என்-லைன் வேரியண்ட்டும் வழக்கமான வென்யூ மாடலில் இருந்து தோற்றத்தில் வேறுப்படும் வகையில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் அப்கிரேட்களை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, காரின் முன்பக்க ஃபெண்டரில் என்-லைன் முத்திரை, புதிய முன் & பின்பக்க பம்பர்களில் சிவப்பு நிற ஹைலைட்கள், மேற்கூரையிலும் சிவப்பு நிற தொடுதல்கள், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் இரட்டை-முனை எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்ட அம்சங்களை வென்யூ என்-லைன் காரில் எதிர்பார்க்கலாம். புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், அதில் கொண்டுவரப்படும் அப்டேட்கள் அனைத்தும் வென்யூ என்-லைன் காரிலும் வழங்கப்படலாம்.

புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமான அப்டேட்கள் அனைத்தும் குறிப்பாக முன்பக்கத்தில் தான் வழங்கப்பட உள்ளன. இதன்படி, பாராமெட்ரிக் க்ரில் டிசைன் உடன் புதிய ஸ்டைலில் முன்பக்கம், திருத்தப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் நேர்த்தியான டெயில்லைட்கள் உள்ளிட்டவற்றை வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரிலும், அதனை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட உள்ள வென்யூ என்-லைன் காரிலும் எதிர்பார்க்கிறோம்.

உட்புற கேபினை பொறுத்தவரையில், வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரிலேயே பெரியதாக எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை என கூறப்படுவதால், என்-லைன் வேரியண்ட்டிலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஐ20 என்-லைன் காரை போன்று இதன் கேபினும் முழுவதுமாக அடர் கருப்பு நிறத்தில், ஆங்காங்கே என்-லைன் முத்திரைகளுடன் வழங்கப்படலாம். வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரில் புதியதாக ஏதேனும் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட உள்ளனவா என்பது அதன் அறிமுகத்தின்போதே தெரியவரும்.

இயக்க ஆற்றலை வழங்க, புதிய ஹூண்டாய் வென்யூ என்-லைன் காரிலும் ஐ20 என்-லைனில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 120 எச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் & 6-ஸ்பீடு ஐஎம்டி யூனிட் வழங்கப்படுகின்றன.

வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், தற்சமயம் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (83 பிஎச்பி வரையில்), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (118 எச்பி) & 1.5 லிட்டர் டீசல் (113 பிஎச்பி) என்ஜின் தேர்வுகளே தொடரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

அதுவே 1.0 லி டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையான தேர்வாகவும், ஐஎம்டி & 7-ஸ்பீடு டிசிடி கூடுதல் தேர்வுகளாகவும் வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய வென்யூ என்-லைன் காரில் இந்த 1.0 லி டர்போ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி & 6-ஸ்பீடு ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் மட்டுமே கொடுக்கப்படுமாம். ஏற்கனவே கூறியதுபோல், எப்படி இருந்தாலும், வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகே வென்யூ என்-லைன் இந்திய சந்தையில் களமிறக்கப்படும்.

விற்பனையில் ஹூண்டாய் வென்யூக்கு கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இந்திய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விரைவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா என்ற மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் அப்டேட் வெர்சன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








