2022 மார்ச்சில் 15% குறைந்த ஹூண்டாய் கார்களின் விற்பனை!! சந்தை பங்கு 13.9%-ஆக சரிவு!
தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸின் கடந்த 2022 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகிக்கு அடுத்து பயணிகள் கார்கள் விற்பனையில் 2வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸுடன் ஹூண்டாய் நிறுவனம் மல்லுக்கட்டி வருவது கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 44,600 கார்களை ஹூண்டாய் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

அதுவே 2021 மார்ச் மாதத்தில் 52,600 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 15.21% குறைந்துள்ளது. ஆனால் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2022 பிப்ரவரியை காட்டிலும் 1.25% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 44,050 ஹூண்டாய் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த மார்ச் மாதத்தில், இந்திய சந்தையில் ஒட்டு மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் ஹூண்டாயின் பங்கு 13.9% ஆகும். அதுவே 2021 மார்ச்சில் இது 16.4% ஆக இருந்தது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார்கள் வரிசையில் தற்சமயம் ஹேட்ச்பேக் கார்களாக சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20, ஐ20 என் லைன் உள்ளிட்டவையும், செடான் கார்களாக அவ்ரா & வெர்னாவும் உள்ளன.

தற்சமயம் ட்ரெண்டில் உள்ள எஸ்யூவி உடலமைப்பை கொண்ட மாடல்களாக வென்யூ, க்ரெட்டா, அல்கஸார், டக்ஸன் உள்ளிட்டவற்றை இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவின் நம்பர்.01 எஸ்யூவி கார் பிராண்டாக ஹூண்டாய் தான் விளங்கிவந்தது. ஆனால் சமீப மாதங்களாக, நெக்ஸான் & பஞ்ச் மாடல்களின் மூலம் அந்த இடத்தை டாடா மோட்டார்ஸ் பெற்று வருகிறது.

இருப்பினும் இப்போதும் ஹூண்டாய் வென்யூ & க்ரெட்டா எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பே சந்தையில் கிடைத்து வருகிறது. இந்த தென்கொரிய பிராண்டில் இருந்து எலக்ட்ரிக் காராக கோனா எலக்ட்ரிக் மட்டுமே தற்போதைக்கு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு 2022ஆம் ஆண்டில் தற்போதுவரையில் ஹூண்டாய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கு நிலவிவரும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறையை முக்கிய காரணமாக சொல்லலாம். குறைக்கடத்திகளின் விநியோக சங்கிலியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறும் ஹூண்டாய், இதற்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முன்னதாக கூறியிருந்தது.

எதிர்காலத்தில், வழக்கமான எரிபொருள் என்ஜின் கார்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களையும் புதியதாக அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை அப்கிரேடை பொறுத்தவரையில், டக்ஸன் & வென்யூ எஸ்யூவி மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களை கொண்டுவர ஹுண்டாய் தயாராகி வருகிறது. இவற்றின் சோதனை மாதிரிகளை கடந்த மாதங்களில் இந்திய சாலைகளில் கூட பார்க்க முடிந்தது.

இவை இரண்டும் நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 2023இல் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய தலைமுறை வெர்னா கார்களை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இவற்றுடன் 2023இல் கோனா இவி-யையும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு ஹூண்டாய் அப்கிரேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மாடலாக சர்வதேச சந்தைகளில் பிரபலமானதாக உள்ள ஐயோனிக் 5 இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளதாம். ஏனெனில் ஹூண்டாய் ஐயோனிக் 5 காரும் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், அனைவரும் வாங்கக்கூடிய விலையில் ஆரம்ப-நிலை இவி-ஐ 2024இல் ஹூண்டாய் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹூண்டாய் தயாரிப்புகள் பிற வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஹூண்டாயின் 3-இருக்கை வரிசை கொண்ட எஸ்யூவி காரான அல்கஸார், க்ராண்ட் க்ரெட்டா என்கிற பெயரில் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








