செம்மையாக இருக்கு... டாடா ஹெரியர் கஸிரங்கா எடிசன்!! ஷோரூமில் இருந்து படங்கள் வெளியீடு!
டாடா ஹெரியர் கஸிரங்கா கார் தொடர்பான லேட்டஸ்ட் படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் அதன் எஸ்யூவி கார்களின் கஸிரங்கா எடிசன்களை அறிமுகப்படுத்தியது. இதன்படி, நெக்ஸான், ஹெரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் எஸ்யூவி கார்களில் ஸ்பெஷல் எடிசனாக கஸிரங்கா எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளது.

2022 ஐபிஎல் போட்டிகளின்போது மைதானங்களில் நிறுத்தப்பட உள்ள இவற்றின் டெலிவிரிகள் அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவை டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஹெரியர் கஸிரங்கா எடிசன் காரின் படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளன.

இந்த படங்களின் மூலம் புதிய ஹெரியர் கஸிரங்கா காரின் வெளிப்புறம் மட்டுமின்றி, உட்புறத்தையும் காண முடிகிறது. டாடா மோட்டார்ஸின் புதிய கஸிரங்கா எஸ்யூவி கார்கள் புதுமையான பழுப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதனால் இந்த ஹெரியர் கஸிரங்கா காரும் பழுப்பு நிறத்தில் உள்ளது.

அதேநேரம் இந்த பழுப்பு நிற வெளிப்புற பெயிண்ட்டிற்கு எடுப்பாக பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஹெரியரின் இந்த ஸ்பெஷல் எடிசனில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் வழக்கம்போல் முன்பக்க க்ரில் பகுதியும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஹெரியரின் டாப் வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த கஸிரங்கா எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹெரியரில் வழங்கப்படும் அம்சங்கள் அனைத்தையும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனிலும் எதிர்பார்க்கலாம். க்ரோம் கதவு கைப்பிடிகள் இந்த புதிய வெர்சனில் கருப்பு நிற ஸ்ட்ரிப்-ஆல் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கருப்பு நிற காண்டாமிருகம் சின்னம் முன்பக்க ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பின்பக்கத்தில் ஹெரியர் முத்திரை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று உட்புற கேபினில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி வெளிப்புறத்தை போன்று காரின் உட்புறமும் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கதவு பேட்கள் லெதரால் வழங்கப்பட்டுள்ளன. இவை நிச்சயமாக பயணிகளுக்கு கூடுதல் பிரீமியம் உணர்வை வழங்கும்.

உட்புறத்தில் முன் இருக்கைகளின் தலையணைகளின் கவர்களில் காண்டாமிருகத்தின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன் இருக்கைகள் பயணிகளுக்கு சூடான காற்றை வழங்கும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய முன் இருக்கைகள் ஹெரியர் கஸிரங்கா காரில் மட்டுமின்றி, மற்ற கஸிரங்கா எஸ்யூவி கார்களிலும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

வழக்கமான ஹெரியரில் வழங்கப்படுவதை போன்று இந்த கஸிரங்கா எடிசனிலும் டேஸ்போர்ட் ஆனது ஓக் மரத்தினால் ஆனதாக உள்ளது. தொழிற்நுட்ப அப்கிரேட்களை பொறுத்தவரையில், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனில் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் ஹெரியரில் இந்த இணைப்பு வசதிகள் வயரின் மூலமாக செயல்படக்கூடியவைகளாக உள்ளன. இவை போதாதென்று, காற்று சுத்திகரிப்பானையும் புதியதாக தனது அனைத்து கஸிரங்கா கார்களிலும் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இவை தவிர்த்து ஹெரியரின் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும் அத்தனை அம்சங்களும் புதிய கஸிரங்கா காரிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெரியரின் டாப் எக்ஸ்.இசட்+ வேரியண்ட்டில் பனோராமிக் சன்ரூஃப், 6-விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, தன்னிச்சையாக டிம்-ஆகக்கூடிய பின்புறத்தை காட்டும் உட்புற கண்ணாடி, எல்இடி டிஆர்எல்-களுடன் HID பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னரிங் ஃபாக் விளக்குகள், அனலாக் வேகமானி உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு 7-இன்ச் டிஎஃப்டி திரை, பாதை ரெஸ்பான்ஸ் அமைப்பு மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மற்றப்படி ஹெரியர் எஸ்யூவி காரின் 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் எந்த டிரான்ஸ்மிஷன் தேர்வு புதிய கஸிரங்கா எடிசனில் வழங்கப்படும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை.


Click it and Unblock the Notifications