2022 மாருதி சுஸுகி எர்டிகா விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்!
2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 எக்ஸ்எல்6 எம்பிவிக்கு முன்னதாக, மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மலிவானது, விசாலமான வாகனம் மற்றும் இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும் என்ற வெற்றிக்கான உண்மையான தாரக மந்திரங்களை கொண்டிருந்தாலும், பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், நிறைய மாற்றங்களை புதிய எர்டிகா எம்பிவி சந்தித்துள்ளது. அந்த மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்தவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வெளிப்புற டிசைன் மாற்றங்கள்!
2022 மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவியில் புதிய முன் பக்க க்ரில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய மெஷின்-கட் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் டெயில்கேட்டில் க்ரோம் ஹைலைட்களையும் காண முடிகிறது. பழைய மாடலில் இருந்த பியர்ல் ஆர்டிக்ட் ஒயிட், மேக்மா க்ரே, ஆபர்ன் ரெட், ப்ரைம் ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ ஆகிய வண்ண தேர்வுகள் புதிய மாடலுக்கு கொண்டு வரப்பட்டாலும், ஸ்பெலின்டிட் சில்வர் மற்றும் டிக்னிட்டி ப்ரவுன் ஆகிய 2 புதிய வண்ண தேர்வுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

உட்புற டிசைன் மாற்றங்கள்!
பழைய மாடலின் கேபின் டிசைனுடன், புதிய மாடலின் கேபின் டிசைன் ஒத்திருந்தாலும், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி புதிய ட்யூயல்-டோன் அப்ஹோல்ட்ரியை இது பெற்றுள்ளது. அத்துடன் டேஷ்போர்டு மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவை, தேக்கு மரத்தலான மெட்டாலிக் அலங்கார வேலைப்பாடுகளை பெற்றுள்ளன. இந்த எம்பிவியின் கேபினை இவை பிரீமியமாக காட்டுகின்றன. மேலும் எர்டிகாவின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் தற்போது பேடில் ஷிஃப்டர்களும் வழங்கப்படுகின்றன.

பவர்ட்ரெயின்!
மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவின் பானெட்டிற்கு அடியில், 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் சிஎன்ஜி தேர்வும் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 87.8 பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளிப்படுத்தும்.

பெட்ரோல் மாடலை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு புதியது ஆகும். மறுபக்கம் எர்டிகா எஸ்-சிஎன்ஜி, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும்.

வசதிகள்!
2022 எர்டிகா எம்பிவியில், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் ஃபங்ஷனுடன் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், சுஸுகி கனெக்ட் (கனெக்டட் கார் தொழில்நுட்பம்) ஆகியவற்றை மாருதி சுஸுகி சேர்த்துள்ளது. அதே சமயம் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்கள், சிஎன்ஜி-க்கான பிரத்யேக ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளன. மேலும் இந்த எம்பிவியின் டாப் வேரியண்ட்களில் 4 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஹில்-ஹோல்டு அஸிஸ்ட் உடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் வசதியும் கொடுக்கப்படுகிறது. அத்துடன் பழைய மாடலின் வசதிகளும் புதிய மாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விலை!
மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் டாப் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 12.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த எம்பிவியின் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப விலை 10.44 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாப் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 11.54 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வர்த்தக ரீதியிலான பயன்பாடுகளுக்கான எர்டிகாவின் 'டூர் எம்' பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 9.46 லட்ச ரூபாய் ஆகவும், சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 10.41 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

போட்டியாளர்கள்!
இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் கியா கேரன்ஸ் போன்ற கார்களுக்கு 2022 மாருதி சுஸுகி எர்டிகா சிறந்த மாற்றாக இருக்கும். அத்துடன் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவிக்கு இது சிறந்த மாற்றுதான். கியா கேரன்ஸின் வருகையில் உருவாகியுள்ள கடுமையான போட்டியை, 2022 எர்டிகா சமாளிக்கும் என மாருதி சுஸுகி நம்புகிறது. இதற்கு அடுத்தபடியாக எக்ஸ்எல்6 எம்பிவியின் 2022 மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








