புதிய அவதாரம் எடுக்கும் இன்னோவா... எடுத்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக தீயாய் வேலை செய்யும் டொயோட்டா!
டொயோட்டா இன்னோவா கார் புதிய அவதாரம் எடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo) டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் டீசல் வேரியண்ட்களுக்கு (Diesel Variants) முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை தற்போது நிறுத்தி விட்டது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டீசல் இன்ஜின் எமிஷன் டெஸ்ட்டில் (Emission Test) தோல்வியடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டீசல் வேரியண்ட்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டீசல் வேரியண்ட்கள் இல்லாமலேயே இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து சிறப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா நிறுவனம் உள்ளது.

இதன் காரணமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் லிமிடெட் எடிசன் வேரியண்ட்டை (Limited Edition Variant) டொயோட்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஜிஎக்ஸ் (GX) வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த லிமிடெட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெட்ரோல் வேரியண்ட் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் இதுபோன்ற லிமிடெட் எடிசன் மாடல்களை மட்டும் வைத்து கொண்டு விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து சிறப்பான வகையில் தக்க வைக்க முடியாது என்பது டொயோட்டா நிறுவனத்திற்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்கள்.

பெட்ரோல் தற்போது மூன்று இலக்கத்தில் விற்பனையாகி கொண்டிருப்பதால் மைலேஜ் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே இன்னோவா காரில் புதிய மாடல் ஒன்றை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதுதான் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ். டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரை பதிவு செய்து விட்டது.

டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை பெங்களூர் நகருக்கு அருகே அமைந்துள்ளது. அந்த பகுதியில் சாலை சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டபோது பல முறை கேமராவின் கண்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் சிக்கியுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் அளவில் பெரிதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரிலேயே நமக்கு விசாலமான இடவசதி கிடைக்கிறது. ஆனால் இன்னோவா ஹைக்ராஸ் அதைக்காட்டிலும் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்னும் தாராளமான இடவசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரானது பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வரவேற்க கூடிய வகையில் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரின் பெட்ரோல் மாடல்களில், தற்போதைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வழங்கப்படும் அதே இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2.7 லிட்டர், நான்கு-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 164 பிஹெச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

அதே சமயம் ஹைப்ரிட் பவர்ட்ரெயினை பொறுத்தவரையில் டொயோட்டா கேம்ரி (Toyota Camry) காரின் 2.5 லிட்டர் Atkinson Cycle ஹைப்ரிட் பவர்ட்ரெயினை இன்னோவா ஹைக்ராஸ் காரில் டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரில் இந்த 2.5 லிட்டர், 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் Atkinson Cycle இன்ஜின் அதிகபட்சமாக 175.5 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் உள்ளது.

இதனுடன் 160kW எலெக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த பவர்ட்ரெயின் 215 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. வசதிகளை பொறுத்தவரையில், சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே ஆகியவை புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்படலாம்.

இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள மிகவும் முக்கியமான தயாரிப்பாக இன்னோவா ஹைக்ராஸ் கார் உள்ளது. இன்னோவா காரின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று எடுத்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக ஹைக்ராஸ் கார் தொடர்பான பணிகளில் டொயோட்டா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








