சிம்மாசனத்தை தட்டி தூக்கிய டாடா! 2022ல் முதலிடத்தை பிடிச்சு அசத்தீட்டாங்க! பாதுகாப்பான காரால் கிடைத்த கௌரவம்!
இந்திய சந்தையில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்த சூழலில், இந்திய சந்தையில் 2022ம் ஆண்டு அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார் எது? என்ற கேள்விக்கு தற்போது நமக்கு பதில் கிடைத்துள்ளது.
டாடா நெக்ஸான்தான் (Tata Nexon), 2022ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்ற மகுடத்தை தட்டி சென்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,56,225 நெக்ஸான் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 2022ம் ஆண்டு ஜனவரியில் இருந்து நவம்பர் வரையிலான விற்பனை எண்ணிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை கிடைத்த பிறகுதான், 2022ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துல்லியமாக எவ்வளவு நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது என்பது தெரிய வரும்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் (Tata Nexon EV) விற்பனை செய்து வருகிறது. அவற்றையும் சேர்த்துதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,56,225 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. நெக்ஸான் காரின் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலம், ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் கடுமையான போட்டியை வழங்கியுள்ளது.
இதுதவிர நெக்ஸான் கார் மற்றொரு மைல்கல் ஒன்றை எட்டியுள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 4 லட்சம் நெக்ஸான் கார்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல். உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 4 லட்சம் நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவும் மிகப்பெரிய மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, நெக்ஸான் காரின் புதிய XZ+ (L) என்ற வேரியண்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகம் மூலம், டாடா நெக்ஸான் கார் தற்போது ஒட்டுமொத்தமாக 77 வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற வேரியண்ட்டை தேர்வு செய்ய முடியும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பாதுகாப்புதான் அந்த காரணம்.
குளோபல் என்சிஏபி (Global-NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கிய முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸான் வசம்தான் உள்ளது. டாடா நெக்ஸான் காருக்கு பிறகுதான், மற்ற இந்திய கார்கள் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற தொடங்கின. டாடா நெக்ஸான் காரில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் கட்டுமான தரமும் சிறப்பாக இருப்பதால், சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் கார் காப்பாற்றியுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், டாடா நெக்ஸான் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் டாடா நெக்ஸான் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 108 பிஹெச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், டாடா நெக்ஸான் காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. தற்போதைய நிலையில் இதுதான் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








