பைக் வாங்கற காசுல இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிடலாம்... உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம்!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய எரிபொருட்கள் மிகவும் அதிகப்படியான விலையில் (Price) விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு பலரும் விரும்புகின்றனர். ஆனால் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற முடியாமல், தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே ஓட்டும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெயரே வித்தியாசமா இருக்கே!
இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்று பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் தற்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காருக்கு ஈஸ்-இ (Eas-E) என பெயரிடப்பட்டுள்ளது.
புக்கிங் கூரையை பிச்சுகிட்டு கொட்டுது!
பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. வெறும் 2 ஆயிரம் ரூபாயை மட்டும் முன்பணமாக கட்டினால், இந்த எலெக்ட்ரிக் காரை புக்கிங் செய்து கொள்ள முடியும். விலையுடன், முன்பணமும் மிகவும் குறைவாக இருப்பதால், இந்த எலெக்ட்ரிக் காருக்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டன.
இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருவதாக பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இந்த புதிய எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அதான் வெளிநாட்ல இருந்துலாம் புக்கிங் குவியுதா!
பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரானது, மிகவும் சிறிய மைக்ரோ-கார் (Micro-car) ஆகும். பொதுவாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மைக்ரோ-கார்களில் ட்யூப்லர் சேஸிஸ்தான் (Tubular Chassis) பயன்படுத்தப்படும். ஆனால் பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் மோனோகாக் சேஸிஸ் (Monocoque Chassis) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோனோகாக் சேஸிஸை பொதுவாக பெரிய கார்களில்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம், ஈஸ்-இ மைக்ரோ காரிலேயே இதை பயன்படுத்தியுள்ளது. எனவே பாதுகாப்பு விஷயத்தில் புத்தம் புதிய ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் தலைசிறந்து விளங்கும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!
120 கிலோ மீட்டர்கள், 160 கிலோ மீட்டர்கள் மற்றும் 200 கிலோ மீட்டர்கள் என மொத்தம் 3 ரேஞ்ச் (Range) ஆப்ஷன்களில் பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய தூரம்தான் ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சார்ஜ் ஏற எவ்ளோ நேரம் ஆகும்?
15A சாக்கெட்டை பயன்படுத்தி, பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். வெறும் 4 மணி நேரத்திற்கு உள்ளாகவே இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி முழுமையாக நிரம்பி விடும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சார்ஜ் செய்வது பெரிய தலைவலியாக இருக்காது என நம்பலாம்.
ஒரு கிலோ மீட்டருக்கு இவ்ளோதான் செலவா!
ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு 75 பைசாவிற்கும் குறைவாகவே செலவாகும் என பிஎம்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசலுக்காக செலவிடப்படும் தொகையை சேமிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் நல்லதொரு ஆப்ஷனாக இருக்கலாம்.
டாப் ஸ்பீடு எவ்ளோ?
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த புதிய ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் வெறும் 5 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும் என பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எத்தன சீட்கள் இருக்கு?
இந்த எலெக்ட்ரிக் காரில், முன் பகுதியில் ஒன்று, பின் பகுதியில் ஒன்று என மொத்தம் 2 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 இருக்கைகள் மட்டுமே இருந்தாலும் கூட, நான்கு கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இரண்டு பகுதிகளின் வழியாகவும் இந்த எலெக்ட்ரிக் காருக்கு உள்ளே பயணிகள் ஏறி, இறங்கி கொள்ள முடியும்.
இவ்ளோ வசதிகள் இருக்கா!
ஆன்போர்டு நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளை ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் பிஎம்வி நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் டிரைவிங் மோடுகள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிமோட் பார்க்கிங் அஸிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் லைட்கள் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
விலை எவ்வளவு?
பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 4.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையாகும். இதன் மூலம் இந்திய சந்தையின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (India's Cheapest Electric Car) என்ற பெருமையை பிஎம்வி ஈஸ்-இ தன்வசப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிரீமியம் பைக்குகளை (Premium Bikes) வாங்குவது என்பது தற்போது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாகி விட்டது. இந்த பிரீமியம் பைக்குகளை வாங்கும் விலையில், பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வாங்கி விட முடியும். மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிக ரேஞ்ச் வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்ட வெர்ஷன்களின் விலை முறையே 6.79 லட்ச ரூபாய் மற்றும் 7.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு ஏற்றது?
நகர பகுதிகளில் தினசரி அலுவலகம் சென்று வருவதற்கு பெட்ரோல், டீசல் கார்களை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும். இதன் மூலம் பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுப்படுத்தலாம். அத்துடன் இது மிகவும் சிறிய மைக்ரோ-கார் என்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிப்பதற்கும் உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








