முடிவுக்கு வரும் ஜிப்ஸி சகாப்தம்... அனைத்து கார்களையும் வெளியேற்ற இந்திய ராணுவம் திட்டமா? முழு விபரம்!
இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து அனைத்து ஜிப்ஸி கார்களையும் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என நாட்டின் அனைத்து பாதுகாப்பு படைகளும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக மாருதி ஜிப்ஸி (Maruti Gypsy) காரை பயன்படுத்தி வருகின்றன. எளிமையான தோற்றம், சிறந்த ஆஃப்-ரோடு இயக்க அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இக்கார் இந்திய பாதுகாப்பு துறையின் விருப்பமான காராக மாறியிருக்கின்றது.

இந்த காரை மாருதி நிறுவனம் 1984ம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமான முதலில் இருந்து இப்போது வரை மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக அது காட்சியளிக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இக்கார் தற்போது விற்பனையில் இல்லை.

புதிய பாதுகாப்பு விதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இக்கார் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், இந்திய பாதுகாப்பு படைக்கு ஆர்டரின் பேரில் அவ்வப்போது மாருதி ஜிப்ஸி கார்கள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, தங்களிடம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து மாருதி ஜிப்ஸி கார்களையும் இந்திய பாதுகாப்பு படை வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படை ஆகிய மூன்றும் ஜிப்ஸி-க்கு மாற்றாக வேறொரு சாஃப்ட் டாப் கொண்ட 4X4 தொழில்நுட்ப காரை தேடி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதற்கான முன்மொழிவை பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் ஆர்எஃப்பி (RFP) வழங்கியிருப்பதாகவும் அது கூறுகின்றது.

இன்றைய நிலவரப்படி 35 ஆயிரத்திற்கும் அதிகமான ஜிப்ஸி-க்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் இந்திய அரசு விற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக நிஸான் ஜோங்கா, மஹிந்திரா எம்எம் 540 மற்றும் எம்எம் 550 ஆகிய கார் மாடல்களை பயன்பாட்டில் இருந்து அகற்றியபோது, அந்த பழைய வாகனங்கள் பெரும்பாலானவற்றை அரசு விற்க செய்தது.

இதன் அடிப்படையில் விரைவில் தற்போது பாதுகாப்பு துறையின் பயன்பாட்டில் இருக்கும் மாருதி ஜிப்ஸி காரையும் விற்கலாம் என யூகிக்கப்படுகின்றது. கடந்த வாரம், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்பு துறை கொள்முதல் கவுன்சில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலகுரக வாகனங்கள் ஜிஎஸ் 4X4 வாங்குவதற்கான ராணுவத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முதலில் 4,964 வாகனங்கள் வாங்குவதற்கே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்க்காக இன்னும் பல வாகனங்கள் ராணுவத்திற்காக பல கட்டங்களில் வாங்கப்பட உள்ளன. புதிதாக வாங்கப்பட இருக்கும் வாகனங்கள் ராணவ பயன்பாட்டிற்கு உகந்த வாகனமா என பல கட்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவை கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.

குறிப்பாக, வாகனத்தின் கெர்ப் எடை 500 கிலோ முதல் 800 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும். இதேபோல், பாலைவனம், மலைப் பாதை, குளம் போன்ற பகுதிகளைக் கடக்கும் திறனை அதுக் கொண்டிருக்க வேண்டும். வீரர்கள் அவர்களின் ஆயுதங்களை வைக்கும் வகையில் சாஃப்ட் டாப் உள்ளிட்டவற்றை அந்த கார் கொண்டிருக்க வேண்டும்.

இதுபோன்று இன்னும் பல தேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் கொண்டிருக்கும் வாகனமே புதிதாக ராணுவத்திற்காக வாங்கப்பட இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்த நிறுவனத்தின் தயாரிப்பை இந்திய ராணுவம் வாங்க இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

அதேவேலையில், டாடா நிறுவனத்தின் சஃபாரி ஸ்டோர்மை பாதுகாப்பு துறை அமைச்சகம் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. கடந்த ஆண்டுகளில் சில டாடா சஃபாரி ஸ்டோர்மே கார்கள் வாங்கப்பட்டன. அவை, ராணுவ உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








