மலிவு விலை கார்தான்.. ஆனா அத பரிசா கொடுக்குறதுக்கும் தனி மனசு வேணும்! பெரிய மனுசன் என்பதை நிரூபித்த தொழிலதிபர்
ஐநா உறுப்பினரான மாயா முக்திக்கு பெருந்தொழிலதிபர் பூனவல்லா மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாயா முக்தி நம்மில் ஒரு சிலர் இந்த பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகின்றோம். சமீப சில காலமாக இணையத்தில் பேசு பொருளாக மாறியிருப்பவரே இந்த மாயா முக்தி. கடந்த காலங்களில் குப்பை பொருக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் தற்போது இந்தியாவிற்கான ஐநா பிரஜையாக மாறியிருக்கின்றார். இந்த பணியில் மாயா முக்தி திறம்பட செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர் ஒருவர் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

சைரஸ் பூனவல்லா இவரே மாருதி காரை மாயா முக்திக்கு பரிசாக வழங்கியவர் ஆவார். இவர் வழங்கியிருப்பது இந்தியாவின் மலிவு விலை கார்களில் ஒன்றாக இருந்தாலும், அதை சமூகநல பணியில் களமிறங்கியிருக்கும் மாயாவிற்கு பரிசாக வழங்க முன்வந்திருக்கும் அவரின் மனசுக்கு இணையவாசிகள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றது.

சைரஸ் பூனவல்லா சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஆவார். இவரே தாமாக முன் வந்து மாயாவிற்கு காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னிடம் வாகனம் இல்லாதது தன்னுடைய பணிக்கு பெரும் தடை கல்லாக இருப்பதாக தெரிவித்தார். இந்த பேட்டியைத் தொடர்ந்தே சைரஸ் பூனவல்லா காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

மஹாராஷ்டிராவின் நாஷிக் பகுதியைச் சேர்ந்தவர் மாயா. இவர் நாஷிக்கைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் பயணித்து அங்குள்ள மக்கள்கள் காணும் குறைகள் மற்றும் பிரச்னைகளை அரசின் முக்கிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கின்றார். இந்த பணிக்காக நாள்தோறும் அவர் பல கிமீ பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அனைத்து பயணங்களுக்கும் அவர் பொது போக்குவரத்து அல்லது வாடகை வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக, பொதுபோக்குவரத்தில் பயணம் மேற்கொள்ளும்போது தன்னுடைய நேரம் அதிகளவில் வீணாவதாக அவர் வேதனை தெரிவித்தார். இதனால், பலருக்கு உதவுவதற்கு சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த தகவல் ஊடகத்தின் வாயிலாக வெளிவந்த நிலையிலேயே தொழிலதிபர் பூனவல்லா மாயாவை நேரில் அழைத்து அவருக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இது அவரின் பணி மேலும் சிறக்க உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மாயாவிடம் ஏற்கனவே வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். விற்பனைக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே 75 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகும் அளவிற்கு நாட்டு மக்களிடையே இந்த காருக்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எஸ்யூவி காரின் ஸ்டைலில் இக்காரை மாருதி சுஸுகி உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் மைக்ரோ எஸ்யூவி தோற்றத்தில் இக்கார் காட்சியளிக்கின்றது. இந்த வாகனம் இந்தியாவில் ரூ. 4.25 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் இக்காரை மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் 998 சிசி திறன் கொண்ட 1.0 லிட்டர், 'கே' சீரிஸ் மோட்டாரே எஸ்-பிரஸ்ஸோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 49 கிலோவாட் (67 பிஎச்பி) பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 எம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே எஸ்-பிரஸ்ஸோவில் வழங்கப்படுகின்றது.

இந்த மோட்டார் 24.12 கிமீ தொடங்கி 25.30 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது. இத்தகைய மிக சூப்பரான மைலேஜ் தரும் திறன் கொண்ட காரையே பூனவல்லா மாயாவிற்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த எஸ்-பிரஸ்ஸோ அதிக மைலேஜ் தரக் கூடிய கார் மட்டுமில்லைங்க அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதும்கூட. இந்த காரில் 11க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் அசிஸ்ட் சென்சார் மற்றும் ட்யூவல் ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் எஸ்-பிரஸ்ஸோவில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, நவீன கால தொழில்நுட்ப வசதிகளாக டிராக்கிங் சிஸ்டம், எமர்ஜென்சி அலர்ட், ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ, வாய்ஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஷிஃப்ட் கியர் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications