இப்போவே வாங்கிடுங்க... அதிரடியாக உயர்த்தப்படும் ஜீப் காம்பஸின் விலைகள்!!
ஜீப் காம்பஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்திய சந்தையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. இந்த அமெரிக்க பிராண்டில் இருந்து இந்திய வாடிக்கையாளர்களை சற்று கவர்ந்த மாடல் என்று பார்த்தால், அது காம்பஸ் 5-இருக்கை எஸ்யூவி தான்.

சற்று விலைமிக்க எஸ்யூவி வாகனமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும், கவர்ச்சிகரமான தோற்றம், ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகள், இவை எல்லாவற்றையும் விட அமெரிக்க பிராண்டில் இருந்து களமிறக்கப்படும் வாகனம் என்கிற சிறப்புகளினால் காம்பஸ் ஒவ்வொரு மாதங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலைகள் மற்றும் போக்குவரத்து செலவுகளினால் ஒவ்வொரு வருடத்திலும் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மற்ற நிறுவனங்களை போல் ஜீப் இந்தியா நிறுவனத்திற்கும் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாகவே காம்பஸ் எஸ்யூவி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் உயர்த்தப்பட உள்ளன.

ஜீப் நிறுவனம் வருகிற மார்ச் 29ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் காம்பஸின் 3-இருக்கை வரிசை வெர்சனை மெரிடியன் என்கிற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகத்தை தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி முதல் காம்பஸின் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. மற்றப்படி காம்பஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட உள்ளன என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.79 லட்சங்களில் இருந்து ரூ.30.72 லட்சங்கள் வரையில் உள்ளன. இதில் ரூ.30.72 லட்சங்கள் என்கிற விலையினை பெறும் காம்பஸ் ட்ரைல்ஹாவ்க் வேரியண்ட் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சமீபத்திய வேரியண்ட்டும் விரைவில் விலை அதிகரிப்பினை ஏற்கவுள்ளது.

ஜீப் காம்பஸில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய ட்ரைல்ஹாவ்க் டாப் வேரியண்ட்டில் டீசல் என்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. காம்பஸின் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி & 250 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 170 பிஎச்பி & 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ட்ரைவ்ஹாவ்க் வேரியண்ட்டில் 4-சக்கர ட்ரைவ் அமைப்புடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. 4-சக்கர ட்ரைவ் அமைப்பை காம்பஸின் சில டாப் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே தற்போதைக்கு பெறுகின்றன. ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற இந்த ட்ரைவ் அமைப்பை விரைவில் அறிமுகப்படுத்தப்பட ஜீப் மெரிடியனிலும் எதிர்பார்க்கிறோம்.

மேலும், இந்த புதிய 3-இருக்கை வரிசை எஸ்யூவி காரில் காம்பஸின் தற்போதைய என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளே வழங்கப்பட உள்ளனவாம். புதிய ஜீப் மெரிடியனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்படும் என்பது அதன் 29ஆம் தேதி அறிமுகத்திற்கு பிறகே தெரியவரும். அதேபோல் காம்பஸின் விலைகள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட உள்ளன என்பதை அறியவும் காத்திருங்கள்.

ஜீப் மெரிடியன் வருகிற 29ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டாலும், விற்பனைக்கு வருவதற்கு எப்படியிருந்தாலும் மே மாதமாகிவிடும். காம்பஸ் உடன் ஒப்பிகையில் மெரிடியன் சில உயர் தரத்திலான சவுகரிய மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய அம்சமாக, அதிநவீன ஓட்டுனர் உதவி தொகுப்பை மெரிடியன் பெற்றுவரவுள்ளது.

இதன் மூலம் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பு, சாலையில் ஒரே பாதையை கடைப்பிடிக்க உதவி உள்ளிட்ட வசதிகளை இந்த 3-இருக்கை வரிசை எஸ்யூவி காரில் பெறலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், பரிமாண அளவுகளை தவிர்த்து காம்பஸிற்கும் புதிய மெரிடியனுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

3-இருக்கை வரிசைகள் வழங்கப்படுவதால், நிச்சயமாக காரின் நீளம் மெரிடியனில் அதிகமாக இருக்கும். ஜீப்பின் இந்த புதிய நீண்ட எஸ்யூவி காருக்கு இந்தியாவில் விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் புதிய ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் போட்டியாக விளங்க தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications








