எல்லாத்தையும் மொத்தமா மாத்த போறாங்க... கர்நாடக அரசு செய்யப்போகும் தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
கர்நாடக மாநில அரசு தரமான சம்பவம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்திடம் (Karnataka State Road Transport Corporation) தற்போது 35 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இவை அனைத்தையும் வரும் 2030ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்ற கர்நாடக அரசு விரும்புகிறது. கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்ட மன்றத்தில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் சயித் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு பதில் அளிக்கும்போதுதான் போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு இந்த தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் ஸ்ரீ ராமுலு சட்டமன்றத்தில் பேசிய விபரங்கள் பின்வருமாறு:

35 ஆயிரம் பஸ்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை கருத்தில் கொண்டு, இவை அனைத்தையும் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்றியாக வேண்டிய தேவை உள்ளது. டீசல் விலை உயர்வால் நாம் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அனைத்து பஸ்களையும் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்றி லாபத்தை சந்திப்பதற்கு விரும்புகிறோம். இது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

2030ம் ஆண்டிற்குள் அனைத்து பஸ்களும் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற வேண்டும் என்பதுதான் எங்களுடைய முயற்சி. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எனவே 2030ம் ஆண்டிற்குள் 35 ஆயிரம் பஸ்களும் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்றப்பட்டு விடும். இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு கூறினார்.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகமும் (Bengaluru Metropolitan Transport Corporation - BMTC) தற்போது எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்குவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பெங்களூர் நகரில் ஏற்கனவே எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கு பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே வரும் காலங்களில் பெங்களூர் நகரில் நம்மால் நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை சாலையில் காண முடியும்.

கர்நாடகா மட்டுமல்லாது, டெல்லி, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களும் எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்குவதற்கு தற்போது தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. டீசலில் இயங்கும் பஸ்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு குறைவாகவே செலவு ஆகிறது.

எனவே எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்கினால் போக்குவரத்து கழகங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். அத்துடன் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பஸ்களை அதிகளவில் இயக்கினால், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் பஸ்கள் மீது நாட்டம் காட்டுவதற்கு இவை இரண்டும்தான் மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

மாநில அரசுகள் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த செக்மெண்ட்டில் சுமார் 80 சதவீத சந்தை பங்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ளும் வகையில் வரும் செப்டம்பர் 28ம் தேதி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது.

அது டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும். எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








