60 கிமீ பயணிக்க வெறும் 5 ரூபா போதும்... 67 வயதான முதியவர் உருவாக்கிய சூப்பரான எலெக்ட்ரிக் கார்!
67 வயதான முதியவர் ஒருவர் தனக்கான மின்சார காரை தானே உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

67 வயதான முதியவர் ஒருவர் எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர் உருவாக்கியிருக்கும் அந்த மின்சார வாகனத்தில் 60 கிமீ பயணிக்க வெறும் 5 ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது கூடுதல் ஆச்சரியத்தை வழங்கும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 67 வயதான முதியவர் ஆண்டனி. இவரே எலெக்ட்ரிக் காரை உருவாக்கியவர் ஆவார். ஆண்டனி, முன்னதாக அவரது பயணங்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. அது என்ன மாடல் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

ஆனால், அந்த இருசக்கர வாகனம் அவருக்கு போதியளவில் கம்ஃபோர்டான பயண அனுபவத்தை வழங்கவில்லை. இந்த நிலைக்கு அவரது வயது முதிர்வே காரணம். பணி காரணமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 கி.மீட்டராவது பயணத்தை மேற்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருக்கின்றார் ஆண்டனி.

இதுபோன்ற நீண்ட தூர பயணங்களை இருசக்கர வாகனத்தில் மேற்கொள்வதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே, புதிதாக ஓர் எலெக்ட்ரிக் காரை வாங்க அவர் திட்டமிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த விலைக்கு தற்போது இந்திய சந்தையில் மின்சார கார்கள் விற்பனைக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இவி-யே குறைந்த விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக காட்சியளிக்கின்றது. ஆனால், இதன் ஆரம்ப விலையோ 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த நிலைதான் அவருக்கான மின்சார வாகனத்தை அவரே உருவாக்க தூண்டியிருக்கின்றது.

தற்போது அந்த எலெக்ட்ரிக் கார் முழுமையாகவே தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கே வந்துவிட்டது. ஆம், ஆண்டனி அந்த மின்சார காரை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டார். பார்ப்பதற்கு டாடா நானோ காரை அந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இந்த டிசைன், அதாவது, பாடி பேனல்களை பேருந்து ரிப்பேர் செய்யும் ஒர்க்ஷாப்பின் வாயிலாக அவர் பெற்றிருக்கின்றார்.

ஆண்டனி கொடுத்த ஐடியாவின் அடிப்படையில் இந்த பேனல்களை ஒர்க்ஷாப் உருவாக்கி வழங்கியிருக்கின்றது. பேட்டரி மற்றும் மின் மோட்டாரை டெல்லியைச் சேர்ந்த ஓர் விற்பனையாளரிடம் இருந்து ஆண்டனி பெற்றிருக்கின்றார். மின்வாகன உருவாக்கத்தில் அனுபவம் இல்லாத காரணத்தினால் சில தவறுகளை ஆரம்பத்தில் அவர் செய்திருக்கின்றார்.

அந்தவகையில், முதலில் தவறான பேட்டரி மற்றும் மின் மோட்டாரையே அவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், விரைவில் அது மாற்றப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகளை ஆண்டனி கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரே தொடங்கியிருக்கின்றார்.

ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த பணி வெகு நாட்களுக்கு நீண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் வைரஸ் பரவல் அதன் தாக்கத்தை வெளிப்படுத்த மேலும் சில மாதங்கள் மின்சார கார் உருவாக்க பணிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறே பல்வேறு சிரமமங்களுக்கு பின்னர் ஆண்டனி அவருக்கான எலெக்ட்ரிக் காரை பெற்றிருக்கின்றார்.

இந்த காரின் உருவாக்கத்திற்கு அவர் ஒட்டுமொத்தமாக 4.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாகத் தெரிவித்துளார். ஆனால், இருவரால் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். மேலும், அது அதிகபட்சம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதை பதிவு செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.
தற்போது எலெக்ட்ரிக் காரில் 60 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய திறன் கொண்ட மின்சார வாகனத்தையே ஆண்டனி தற்போது அலுவலக பயன்பாட்டிற்கு உபயோகித்து வருகின்றார். இதுதவிர அவரிடத்தில் மாருதி ஆல்டோ கார் ஒன்றும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








