கொடி பறக்குதா! உலகையே திரும்பி பார்க்க வைத்த அரசு கல்லூரி மாணவர்கள்! சர்வதேச அரங்கில் தலை நிமிரும் இந்தியா!
அரசு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் குழு, உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தோனேஷியாவில் உள்ள பெர்டமினா மண்டலிகா சர்க்யூட்டில் (Pertamina Mandalika Circuit), ஷெல் ஈக்கோ மராத்தான் 2022 (Shell Eco-Marathon 2022) சர்வதேச ஆற்றல் திறன் போட்டி (International Energy Efficiency Competition) நடைபெற்றது. இதில், கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் பார்டன் ஹில் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் குழு டிசைன் செய்த எலெக்ட்ரிக் கார், இந்த சர்வதேச போட்டியில் விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசு பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்த 19 மாணவர்கள் அடங்கிய குழு இந்த எலெக்ட்ரிக் காரை டிசைன் செய்திருந்தது.

இந்த குழுவிற்கு ப்ராவீகா (Pravega) என பெயரிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அவர்கள் உருவாக்கிய எலெக்ட்ரிக் காருக்கு வண்டி (Vandy) என பெயர் சூட்டப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆக்சியா டெக்னாலஜிஸ் (Acsia Technologies) சாஃப்ட்வேர் கம்பெனியின் வழிகாட்டுதலில் ப்ராவீகா மாணவர்கள் குழு செயல்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தயாரிப்புகள் போட்டியிட்டு நிலையில் ப்ராவீகா குழுவினர் வண்டி சிறந்த ஒன்றாக தேர்வாகியுள்ளது. கேரள மாநில அரசும் இந்த மாணவர்களுக்கு குழுவிற்கு உதவிகளை செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுகுறித்து ப்ராவீகா மாணவர்கள் குழுவின் டீம் லீடர் கல்யாணி எஸ் குமார் கூறியது பின்வருமாறு:

''இந்த சாதனை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றை உருவாக்குவதற்கு எங்கள் பொறியியல் திறன்களை பயன்படுத்த இந்த திட்டம் எங்களுக்கு தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்கியது'' என்றார். சர்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5 அணிகளில் ப்ராவீகா ஒன்றாகும்.

சாதனை படைத்த ப்ரோட்டோடைப் எலெக்ட்ரிக் காரை உருவாக்குவதற்கு ப்ராவீகா குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் எடை 80 கிலோ ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 27 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆக்சியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜஜிமோன் சந்திரன் கூறியது பின்வருமாறு:

''சர்வதேச அளவிலான போட்டியில் நமது மாணவர்கள் விருது வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டதும் எனக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது மாணவர் சமூகத்தை தொடர்ந்து வெற்றிகரமாக வழிநடத்துவதே எங்கள் இலக்கு. தொடர்புடைய அறிவை வழங்குதல், தொழில்துறைக்கு தயாராக வைத்திருத்தல் ஆகியவற்றின் மூலம் உலகத் தரம் வாய்ந்த இன்ஜினியர்களை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்'' என்றார்.

கல்யாணி எஸ் குமார் (டீம் லீடர்), அமல் கிருஷ்ணன், ஹித்தின் கிருஷ்ணா, அகில் நிஷாத், ஜோஸ்வின் டி ராஜன், பிரணவ் பினுலால், பிரகலாத் விவேக், சூரஜ், அர்ஜூன், கௌதம் சாய் கிருஷ்ணா, ஆரோன் க்ளியரன்ஸ், ஆமி சீசர், நியுக்தா கிருஷ்ணா மற்றும் ஆனந்த் ஆகிய மாணவர்கள் அடங்கிய குழுதான் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் கேரள மாணவர்கள் இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








