மாருதி கார்களுக்கு தண்ணி காட்டும் கியாவின் புதிய கார்... சூப்பரான விலைதான் இதுக்கு காரணம்... எவ்ளோனு தெரியுமா?
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களுக்கு கியா நிறுவனத்தின் புதிய கார் 'செக்' வைக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 18,121 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை செல்டோஸ் தட்டி சென்றுள்ளது. அதே சமயம் புதுவரான கியா கேரன்ஸ் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

கியா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 5,109 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. முதல் மாதத்திலேயே இவ்வளவு அதிகமான கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கியா நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், கியா கேரன்ஸ் கார் கடந்த பிப்ரவரி மாதத்தின் மத்தியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. எனவே வரும் மாதங்களில் கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது கியா கேரன்ஸ் காரின் போட்டியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை மிகப்பெரிய வித்தியாசத்தில் கியா கேரன்ஸ் வீழ்த்தியுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் பிரீமியமான வெர்ஷன்தான் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 3,304 எக்ஸ்எல்6 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கியா கேரன்ஸ் காரின் பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 1,805 யூனிட்கள் குறைவாகும்.

வரும் மாதங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்எல்6 காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள தனது கார்களை மேம்படுத்தி, விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன்படி 2022 மாருதி சுஸுகி பலேனோ மற்றும் 2022 மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய கார்கள் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து 2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகாவின் புதிய மாடல் நடப்பு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை தொடர்ந்து மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட புதிய எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்கள் மூலம் கியா கேரன்ஸ் ஏற்படுத்தியுள்ள கடுமையான போட்டியை சமாளிப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் கார்களின் உற்பத்தியை கியா நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது. கேரன்ஸ் காரின் இந்திய அறிமுகமும், அந்த காருக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்புமே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் இந்திய சந்தையில் கியா விற்பனை செய்து வரும் கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கியா கார்களை முன்பதிவு செய்துள்ள/செய்ய போகும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவே டெலிவரி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 8.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாய் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிக சவாலான விலையாக பார்க்கப்படுகிறது. கியா கேரன்ஸ் காருக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பிற்கு இந்த சவாலான விலை நிர்ணயம் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications








