Kia Carens காருக்கு முன்பதிவு தொடக்கம்... இவ்ளோ கட்டினால் போதுமா? பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி இரட்டிப்பானது!
கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கேரன்ஸ் காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் பணிகளை கியா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள கேரன்ஸ் காருக்கு ஜனவரி 14ம் தேதியில் இருந்து (இன்று) முன்பதிவுகள் ஏற்கப்படும் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதன்படி முன்பதிவுகளை ஏற்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இந்த நன்நாளில் கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகைக்கு புதிய காரை முன்பதிவு செய்ய முடிவு செய்திருப்பவர்கள், கியா கேரன்ஸ் காரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கலாம்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி கியா கேரன்ஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கியா கேரன்ஸ் காரை முன்பதிவு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்வது முதல் வழி. அடுத்தது கியா இந்தியா டீலர்ஷிப்கள்.

இந்தியா முழுவதும் உள்ள கியா நிறுவனத்தின் டீலர்ஷிப்களிலும் கேரன்ஸ் காரை நீங்கள் முன்பதிவு செய்யலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், புதிய டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார், மஹிந்திரா எக்ஸ்யூவி700, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா உள்ளிட்ட கார்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிடும்.

எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் டிசைன் கலவையில் கியா கேரன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் காரின் அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கேரன்ஸ் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கின்றன. கியா கேரன்ஸ் காரில் எல்இடி பகல் நேர விளக்குகள், ஸ்பிளிட் எல்இடி டெயில்லைட்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ட்யூயல் டோன் அலாய் வீல்களையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. பிரீமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ப்ளஸ், லக்ஸரி மற்றும் லக்ஸரி ப்ளஸ் என மொத்தம் 5 வேரியண்ட்களில் கியா கேரன்ஸ் கார் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே கேரன்ஸ் காரிலும் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சன்ரூஃப், வைரஸ் மற்றும் பாக்டீரியாவிற்கு எதிரான பாதுகாப்புடன் ஸ்மார்ட் ஏர்-ப்யூரிஃபையர், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமானவை.

மேலும் 8 ஸ்பீக்கர்கள் உடன் பாஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டத்தையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. கியா கேரன்ஸ் காரில், 138 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 113 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 113 பிஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அதே சமயம் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளிட்டவை கியா கேரன்ஸ் காரில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் கியா கேரன்ஸ் உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

கியா கேரன்ஸ் காருக்கு தற்போது முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதால், வெகு விரைவில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே கேரன்ஸ் காருக்கும் உச்சகட்ட வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நான்காவது கார் என்ற பெருமையை கேரன்ஸ் பெறுகிறது. இதற்கு முன்னதாக செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய 3 கார்களை கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அவை மூன்றுமே விற்பனையில் சிறந்து விளங்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications








