விரைவில் அறிமுகமாக உள்ள கியா கேரன்ஸ்... போட்டி கார் மாடல்களை காட்டிலும் அதிகம் மைலேஜ் தருமா? ஒப்பீட்டு தகவல்!
கியா கேரன்ஸ் அதன் போட்டி கார் மாடல்களைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தருமா என்கிற கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவலைக் கீழே பார்க்கலாம்.

நாட்டு வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது, கியா கேரன்ஸ் (Kia Carens). இது ஓர் எம்பிவி ரக காராகும். இது எம்பிவி காராக உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் தோற்றம் எஸ்யூவி கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. ஆகையால், இரு பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இதன் வருகை அமைய இருக்கின்றது.

இந்த நிலையில் இக்காரின் சிறப்பு வசதிகள் மட்டுமின்றி அதன் மைலேஜ் திறனும் போட்டி நிறுவனங்களின் தயாரிப்பிற்கு தலை வலியைக் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், கியா கேரன்ஸ் அதன் போட்டி மாடல்கள் சிலவற்றைக் காட்டிலும் சற்று அதிக மைலேஜ் தரும் காராக இருக்கின்றது. அப்படி என்ன மைலேஜை கியா கேரன்ஸ் கொடுக்கிறது?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா கேரன்ஸ் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், முதலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 15.7 கிமீ மைலேஜையும், 1.4 டி-ஜிடிஐ பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் எஞ்ஜின் ஒரு லிட்டருக்கு 21.3 கிமீ வரையிலும் மைலேஜை வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் சற்றே அதிக மைலேஜ் திறன் ஆகும். இன்னோவா க்ரிஸ்டா அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 10.6 கிமீ முதல் 15.6 கிமீ வரை மைலேஜை வழங்குகின்றது. இதை விட பன் மடங்கு அதிகம் மைலேஜ் திறன் கொண்டதாக கியா கேரன்ஸ் வர இருக்கின்றது.

கேரன்ஸ் பிரமாண்ட தோற்றம் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஹூண்டாய் அல்கஸார் கார் மாடலுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த கார் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 14.5 கிமீ முதல் 20.4 கிமீ வரை மைலேஜ் வழங்குகின்றது. இதற்கும், கேரன்ஸுக்கும் இடையில் சொற்ப அளவிலான மைலேஜ் வித்தியாசமே இருக்கின்றது.

ஆனால், அல்கஸாரைக் காட்டிலும் கேரன்ஸ் அதிக மைலேஜை வழங்குவது அக்காரின் மீதான ஆர்வத்தை இன்னும் கூடுதலாக்கும் வகையில் இருக்கின்றது. ஆனால், இந்த காரின் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டால் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 பெட்ரோல் காரை வெற்றி பெற முடியவில்லை.

ஆம், இந்த காரின் பெட்ரோல் எஞ்ஜின் அதிக மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. எக்ஸ்எல்6 எம்பிவி 17.99 கிமீ முதல் 19.01 கிமீ வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தருகின்றது. கேரன்ஸ் பெட்ரோல் எஞ்ஜினைக் காட்டிலும் இது மிக மிக அதிக மைலேஜ் திறனாகும். எக்ஸ்எல்6 காரில் மாருதி சுசுகி நிறுவனம் டீசல் எஞ்ஜின் தேர்வை வழங்கவில்லை.

அதேநேரத்தில் கேரன்ஸ் காரில் டீசல் எஞ்ஜின் தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. ஆகையால், இந்த கார் மாடலுக்கு, குறிப்பாக அதிக மைலேஜை விரும்புவோர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா கேரன்ஸ் காரில் அதிகம் சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.

அந்தவகையில், 10.25 இன்ச் அளவுள்ள எச்டி தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் இணைப்பு வசதி, 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், 64 நிற தேர்வு கொண்ட ஆம்பிசியண்ட் மின் விளக்கு, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் , வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பன்முக டிரைவிங் மோட்கள், சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர், ஒயர்லெஸ் சார்ஜர், ஸ்லைடிங் ரக இருக்கைகள் என பல்வேறு அம்சங்கள் கேரன்ஸில் இடம் பெற இருக்கின்றன.

இதுதவிர, அதிக பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஏபிஎஸ், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் மற்றும் பின்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கேரன்ஸ் அதிக மைலேஜ் தரும் காராக மட்டுமில்லாமல் நல்ல பாதுகாப்பான காராகவும் இருக்கும். இந்த காரின் அறிமுகம் வரும் பிப்ரவரி 15ம் தேதி நிகழ இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கு புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. இந்த பணி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 7,738 முன்பதிவுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








