நாளை அறிமுகமாகிறது இன்னோவா க்ரிஸ்டா போட்டியாளன் கேரன்ஸ்... இந்த சூப்பரான காரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கியா கேரன்ஸ் (Kia Carens) கார் நாளை அறிமுகமாக இருக்கின்றது. இந்தக் காரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

கியா (Kia) நிறுவனம் அதன் நான்காவது கார் மாடலை இந்தியாவில் களமிறக்க தயாராகிவிட்டது. செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet) மற்றும் கார்னிவல் (Carnival) ஆகிய கார் மாடல்களைத் தொடர்ந்து கேரன்ஸ் (Carens) எனும் புதுமுக கார் மாடலை நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது, கியா. இது ஓர் எம்பிவி ரக வாகனமாகும்.

ஏற்கனவே, கார்னிவல் எம்பிவி காரை கியா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில், மேலும் ஓர் எம்பிவி தேர்வை வழங்கும் விதமாக கேரன்ஸ் காரை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல மவுசு நிலவி வருகின்றது. அந்தவகையில், புதிய கேரன்ஸ் எம்பிவி-க்கும் மக்கள் மத்தியில் தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இக்காரின் அறிமுகம் நாளைய தினம் அரங்கேற இருக்கின்றது. இதனை ஏற்கனவே கியா நிறுவனம் உறுதி செய்துவிட்டது. கார் காதலர்கள், இக்காரின் அறிமுகம் காதலர்கள் தினமான இன்று (பிப்ரவரி 14) அரங்கேறும் என எண்ணி கொண்டிருந்தனர்.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதி செவ்வாய் அன்றே புதிய கேரன்ஸ் காரின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்தது. அறிவிப்பை முன்னிட்டு இக்காரை உற்பத்தி செய்யும் பணிகளையும் நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இக்காரின் உற்பத்தி பணிகள் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் உற்பத்தி ஆலையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கியா கேரன்ஸ் ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எம்பிவி காராகும். இந்த கார் எம்பிவி வாகனங்களுக்கு மட்டுமின்றி எஸ்யூவி கார்களுக்கும் போட்டியாக வர இருக்கின்றது. கியா நிறுவனம் இக்காரை ஆர்வி (RV) எனப்படும் பொழுதுபோக்கு ரக வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இதன் வருகை எஸ்யூவி கார்களுக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம், பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி மற்றும் லக்சூரி ப்ளஸ் ஆகிய ட்ரிம்களிலேயே அது கிடைக்கும். இதன் உயர் நிலை வேரியண்ட், மிக அதிக மற்றும் சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும்.

அந்தவகையில், 10.2 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கான ஒயர்லெஸ் இணைப்பு, 64 நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் மின் விளக்கு, ஏர் ப்யூரிஃபையர், டிஜிட்டல் டிரைவர் திரை மற்றும் சன் ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

இதுமட்டுமின்றி எல்இடி ஹெட்லேம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், இரண்டாம் வரிசை இருக்கைக்கிற்கான ஒன் டச் டம்பிள் ஃபங்கசன், ரூஃப் மவுண்டட் ஏசி வெண்டுகள் உள்ளிட்டவையும் கேரன்ஸ் காரில் இடம் பெற உள்ளன.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் கியா கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் எஞ்ஜின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல், செவன் ஸ்பீடு டிசிடி அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், டவுண்ஹில் பிரேக் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் கேரன்ஸில் இடம் பெற இருக்கின்றன.

ஆகையால், மிக அதிக பாதுகாப்பான வாகனமாக இது காட்சியளிக்கும். ரூ. 14 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விலையில் கேரன்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. துள்ளியமான விலை விபரம் அறிமுக நாளான நாளைய தினத்திலேயே தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








