புக்கிங் குவிகிறது... பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா காரின் அறிமுக தேதி அறிவிப்பு... ஹேப்பி நியூஸ்!
வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் கியா கேரன்ஸ் காரின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களை தொடர்ந்து இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நான்காவது கார் என்ற பெருமையை கேரன்ஸ் பெறுகிறது.

கியா கேரன்ஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கியா கேரன்ஸ் காருக்கு 7,738 முன்பதிவுகள் குவிந்து விட்டன. கியா கேரன்ஸ் காரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதற்கு முன்பாகவே, அதுவும் ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகள் குவிந்திருப்பது என்பது கியா கேரன்ஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கியா கேரன்ஸ் காரை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி விட்டாலும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி? அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது இந்த கேள்விக்கும் நமக்கு விடை கிடைத்து விட்டது. இதன்படி வரும் பிப்ரவரி 15ம் தேதி கியா கேரன்ஸ் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கியா கேரன்ஸ் காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. அத்துடன் இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு கியா கேரன்ஸ் காரை அனுப்பி வைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கியா கேரன்ஸ் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதை இவை நமக்கு உணர்த்தின. பிப்ரவரி மாதத்தில் கியா நிறுவனம் கேரன்ஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றபடியே, வரும் பிப்ரவரி 15ம் தேதி கேரன்ஸ் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக கியா இந்தியா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் கியா கேரன்ஸ் கார் கிடைக்கும். கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, கேரன்ஸ் காரிலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி எல்இடி ஹெட்லேம்ப்கள், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் என பல்வேறு வசதிகளை கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. எனவே இது மதிப்பு வாய்ந்த காராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் கார்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். எனவே கேரன்ஸ் காரில் கியா நிறுவனம் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் வழங்கியுள்ளது. இதில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

அத்துடன் இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு விஷயத்திலும் கியா கேரன்ஸ் குறை வைக்காது என நம்பப்படுகிறது. கியா கேரன்ஸ் காரில் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வையும் கியா கேரன்ஸ் கார் பெற்றுள்ளது. கியர் பாக்ஸை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளையும் இந்த கார் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.

கியா கேரன்ஸ் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வரும் பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்பட்டு விடும். விலை நிர்ணயம் சரியாக இருந்தால், கியா கேரன்ஸ் கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு எண்ணிக்கை அதனை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








