கியா கேரன்ஸ் எம்பிவி கார்களின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவங்கின!! முதல் யூனிட் வெளியேற்றப்பட்டது!
கியா பிராண்டில் இருந்து சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரன்ஸ் எம்பிவி காரின் தயாரிப்பு பணிகள் ஆந்திராவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த புதிய கியா எம்பிவி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

தென்கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்துவரும் பிராண்டாக விளங்குகிறது. செல்டோஸின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் கார்னிவல், சொனெட் மாடல்களுக்கு அடுத்து நான்காவது காராக கேரன்ஸை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கிடையில், 3-இருக்கை வரிசையை கொண்ட எம்பிவி காரான கேரன்ஸின் முதல் யூனிட் ஆந்திராவில் உள்ள அனந்தபுர் தொழிற்சாலையில் இருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாராகும் மூன்றாவது கியா மாடலாக கேரன்ஸ் உருவெடுத்துள்ளது. கார்னிவல் சொகுசு எம்பிவி மட்டும் சிகேடி முறையில், பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு முழு காராக தயாரிக்கப்படுகிறது.

ஆனால் கேரன்ஸ் உள்பட மற்ற கியா கார்களின் பாகங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கியா கேரன்ஸ், எஸ்யூவிகளின் ஸ்போர்டியான பண்பை கொண்ட, குடும்பத்துடன் பயணிப்பதற்கான எம்பிவி காராகும். ஆந்திராவில் தயாரிக்கப்படும் கியா கேரன்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் இருந்து மொத்தம் 80 நாடுகளுக்கு கேரன்ஸ் கார்களை ஏற்றுமதி செய்ய கியா திட்டமிட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பரில் இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட இந்த எம்பிவி கார் அதிகாரப்பூர்வமாக வருகிற 2022 பிப்ரவரியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் கியா கேரன்ஸின் மாதிரிகள் பலமுறை மறைப்புகளுடன் நம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தற்போது இதன் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான டே-ஜின் பார்க் கருத்து தெரிவிக்கையில், "கியா கேரன்ஸ் உடன், நாங்கள் அனைவரும் கியாவில் உத்வேகம் பெறுகிறோம். தற்கால வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு புதிய மதிப்பு முன்மொழிகளை நாங்கள் அட்டவணைக்கு கொண்டு வருகிறோம். இந்த புதிய பயணத்தின் தொடக்கத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

கேரன்ஸ் இந்தியாவில் நாங்கள் வெளியிடும் 4வது தயாரிப்பு ஆகும். நவீன இந்திய குடும்பங்களை பிரதிபலிக்கும் மற்றும் எதிரொலிக்கும் ஒரு தயாரிப்பை வெளிக் கொண்டுவர எங்கள் குழுக்கள் அயராது உழைத்துள்ளன. வாடிக்கையாளர்கள் கியாவை பற்றி நினைக்கும் போது, அவர்கள் சிறந்த இன்-கிளாஸ் அம்சங்கள், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் ஒப்பிட முடியாத உரிமையாளர் அனுபவத்தை எதிர்பார்க்கிறார்கள் - இது உண்மையிலேயே கேரன்ஸில் பிரதிபலிக்கிறது" என்றார்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட உள்ள கேரன்ஸில் 7-ஸ்பீடு டிசிடி மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன. இதன் உட்புற கேபினில் 66 இணைப்பு வசதிகளுடன் புதிய-தலைமுறை கியா கனெக்ட் செயலி, விருப்பத்திற்கு ஏற்ற இருக்கை தேர்வுகள், ஸ்லைடிங் செய்யக்கூடியதாக இருக்கை அடியில் அலமாரி, முன் இருக்கைக்கு பின்னால் உள்ளிழுக்கக்கூடியதாக சிறிய மேசை மற்றும் மூன்றாவது இருக்கை வரிசையில் பாட்டில் & கேஜெட் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இவற்றின் மூலமாக ஒரு பக்கா குடும்ப காராக கேரன்ஸ் விளங்கவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ஏறுமுகமான பாதையில் ஏறுவதற்கான கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்டவை கொடுக்கப்பட உள்ளன. இதன்படி இந்திய சந்தையில் பாதுக்காப்பான எம்பிவி கார்களுள் ஒன்றாக கேரன்ஸ் உருவெடுக்க உள்ளது.

கியா நிறுவனம் இந்த புதிய எம்பிவி காருக்கான முன்பதிவுகளை கடந்த ஜன.14ஆம் தேதி துவங்கியது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் கேரன்ஸை கியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்தின் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். இதற்கான முன் தொகையாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புக்கிங் துவங்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள்ளாகவே கேரன்ஸிற்கு சுமார் 7,738 முன்பதிவுகள் குவிந்து ஆச்சிரியப்படுத்தி இருந்தது. இந்த புதிய கியா எம்பிவி காரினை அறிமுகத்திற்கு முன்னதாக இயக்கி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் கேரன்ஸை பற்றி நாங்கள் அறிந்துக்கொண்ட விபரங்களை செய்தியாக வெளியிட்டுள்ளோம். அவற்றை நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications








