கியா கேரன்ஸின் 3வது இருக்கை வரிசை இந்த அளவிற்கு சவுகரியமானதா!! விரிவான வீடியோ இதோ!
உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் இந்தியாவும் ஒன்று என்றால் அதில் மிகையில்லை. பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் நம் நாட்டில் உள்ளதால், பல வெளிநாட்டு கார் பிராண்ட்கள் கடந்த சில வருடங்களில் இந்திய சந்தையில் கால் தடம் பதித்துள்ளன.

இந்த வகையில் கடந்த 2019இல் செல்டோஸின் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் நுழைந்த கியா அதன் நான்காவது மாடலாக கேரன்ஸ் எஸ்யூவி காரை இந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய தென்கொரிய எம்பிவி காரினை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது.

அதன் மூலம் நாங்கள் அறிந்து கொண்ட விபரங்களை ஏற்கனவே நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் விரிவாக தொகுத்து வழங்கி இருந்தோம். இந்த செய்தியில் கியா கேரன்ஸின் 3வது இருக்கை வரிசையின் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இதுதொடர்பான எங்களது பிரத்யேக வீடியோவினை கீழே காணலாம்.
குடும்பத்துடன் பயணிப்பதற்கான பக்கா 'குடும்ப' காராக கேரன்ஸ் எம்பிவி பார்க்கப்படுகிறது. அதாவது இதன் கேபினில் 6இல் இருந்து 7 பயணிகள் தாராளமாக அமரும் வகையில் 3 இருக்கை வரிசைகள் வழங்கப்பட உள்ளன. 3-இருக்கை வரிசை உடன் சந்தையில் பல எம்பிவி/ எம்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை அனைத்திலும் சவுகரியமான 3ஆம் இருக்கை வரிசை உள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

முதல் இரு இருக்கை வரிசையை சவுகரியமாக அமைக்கும் பொருட்டு, 3வது இருக்கை வரிசையில் தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்தை செலுத்த மறக்கின்றன. ஆனால் இம்முறை கேரன்ஸின் மூலம் கியா இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. கேரன்ஸின் இரண்டாவது இருக்கை வரிசையினை இரு கேப்டன் இருக்கைகள் அல்லது மேசை இருக்கை உடன் வேரியண்ட்டை பொறுத்து பெறலாம்.

இந்த இருக்கைகளை தேவைக்கு ஏற்ப முன்னோக்கி & பின்னோக்கி மடக்கி கொள்ளலாம். அத்துடன் இதன் இரண்டாவது வரிசை இருக்கைகளை முற்றிலுமாக மடக்கி சுருட்டியும் வைத்து கொள்ளலாம். இதன் மூலமாக மூன்றாவது இருக்கை வரிசையில் அமரும் பயணிகளுக்கு கூடுதல் இடவசதி கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் எளிதாகிறது.

சரி 3வது இருக்கை-வரிசைக்கு வருவோம். இதன் வலது பக்கத்தில் கேப்டன் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. 3வது வரிசை இருக்கைகளையும் தேவைக்கேற்ப ஒரு பொத்தானை அழுத்துவதும் மூலம் சுருட்டி வைத்து கொள்ளலாம். 3ஆம் வரிசை இருக்கைகளில் இரு பெரியவர்கள் தாராளமாக, மிக சவுகரியமாக அமர்ந்து கொள்ளலாம். 2வது வரிசை இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கும்போதும் இந்த சவுகரியம் கிடைப்பதுதான் இதில் ஆச்சிரியமானதே.

முழு-அளவு எஸ்யூவி கார்களில் கூட இந்த அளவிற்கு இடவசதி இந்த பகுதியில் கிடைப்பதில்லை. கேரன்ஸில் கடைசி வரிசை இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களை கூட அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இங்கு அமரும் பயணிகளுக்கு சரியாக மேலே, தலைக்கு நேராக ஏசி காற்று துளைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த துளைகளில் இருந்து வெளிவரும் காற்றின் அளவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அவற்றின் திசையையும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக சார்ஜிங் துளைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பகுதியில் மொபைல் போன்/ டேப்லெட் உள்ளிட்டவற்றை வைக்கவும், பாட்டில்கள் & கப்-கள் வைக்கவும் இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பற்றி தனியாக, ஒரு செய்தியாக பார்க்கும்போதே கேரன்ஸின் 3வது இருக்கை வரிசை எந்த அளவிற்கு எங்களுக்கு சவுகரியத்தை பயணத்தின்போது வழங்கியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

காரின் உள்ளே அனைத்து இருக்கைகளும் மடக்கி, நீட்டிக்கொள்ளும் வசதி உடன் உள்ளன. ஆதலால் கியா கேரன்ஸ் தொலைத்தூர பயணங்களுக்கும் மிகவும் உகந்த எம்பிவி மாடலாக, செயல்முறைக்கு ஏற்ற வாகனமாக விளங்கவுள்ளதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதாவது, மூன்றாவது இருக்கை வரிசையிலும் மகிழ்ச்சியான பயணத்தை பெறலாம்.

இவற்றுடன் உட்புற கேபினில் ஏகப்பட்ட அம்சங்களை பெற்றுவரும் கியா கேரன்ஸில் சில சிறப்பான என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இருப்பினும் எங்களை கேட்டால், இவை எல்லாவற்றையும் விட இந்த எம்யூவி-இன் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் 3வது இருக்கை வரிசை ஆகும். இதனை கேரன்ஸில் ஒரு முறை பயணித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








