இந்தியர்கள் மத்தியில் கியா ரொம்ப ஃபேமஸா ஆயிடுச்சு... போறபோக்க பாத்தா மாருதியையே ஓரம் கட்டிடும் போல!
கியா (Kia Motors) நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு சான்றாக ஓர் தரமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா (Kia), இந்த பெயர் இப்போது இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. இது, ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்பதாலா தெரியவில்லை மக்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இதுவரை 5 லட்சம் யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலங்களே ஆகின்றன. இத்தகைய குறுகிய கால இடைவெளியிலேயே இத்தனை லட்சம் யூனிட் வாகனங்களை இந்தியர்களிடத்தில் கியா விற்றிருக்கின்றது. பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றபோதிலும் இத்தகைய வரவேற்பைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலில் அறிமுகமாகிய வெகு குறுகிய கால இடைவெளியிலேயே ஐந்து லட்சம் வாகன யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது, கியா. இது ஒரு மிக பெரிய சாதனை. கியா நிறுவனம் இந்திய சந்தையில், செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet), கேரன்ஸ் (Carens) மற்றும் கார்னிவல் (Carnival) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதில், செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டும் எஸ்யூவி ரக காராகும். கேரன்ஸ் மற்றும் கார்னிவல் ஆகியவை எம்பிவி ரக காராகும். இவற்றுடன் சேர்த்து விரைவில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங்குகள் நாட்டில் தொடங்கிவிட்டன. இதுதவிர, இன்னும் சில மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியையும் அது மேற்கொண்டு வருகின்றது.

நிறுவனத்தின் செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய இந்த மூன்று தயாரிப்புகளுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அண்மையில் விற்பனைக்கு வந்த கேரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை வேகத்தை இன்னும் பல மடங்கு அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விற்பனைக்கு வந்த 4.5 மாதங்களிலேயே சுமார் 40 ஆயிரம் யூனிட் விற்பனையை கேரன்ஸ் பெற்றிருக்கின்றது. ஆகையால் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக கேரன்ஸ் மாறியிருக்கின்றது. ஆனால், இதைக் காட்டிலும் பல மடங்கு சூப்பரான விற்பனையைப் பெறும் வாகனமாக செல்டோஸ் இருக்கின்றது.

ஒட்டுமொத்த விற்பனையில் 59 சதவீதத்தை இக்காரே பெற்றிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான இடத்தை சொனெட் பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனம் 32 சதவீத பங்கைக் கொண்டிருக்கின்றது. தற்போது கியா நிறுவனம் விற்பனைச் செய்திருக்கும் 5 லட்சம் யூனிட்டுகளும் இந்தியாவில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டவை ஆகும்.

இதுதவிர நிறுவனம் சில யூனிட்டுகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கின்றது. இரண்டும் சேர்த்து 6,34,224 யூனிட்டுகளை இதுவரை கியா நிறுவனம் இந்தியாவில் இருந்து விற்பனைச் செய்திருக்கின்றது. கியா நிறுவனம் தற்போது தனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் விற்பனை வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் களமிறங்கியிருக்கின்றது.

அந்தவகையில், நிறுவனம் செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை இன்னும் ஒரு சில மாதங்களில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரில் புதுப்பித்தலின் அடிப்படையில் பன்முக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் காரின் முகப்பு பகுதி மற்றும் கேபின் பகுதியில் மிக பெரியளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, காரின் புதிய ஹெட்லைட் மற்றும் க்ரில் ஆகியவை இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதையடுத்து காரின் உட்பக்கத்தை சொகுசு கார்களுக்கு இணையானதாக மாற்றும் விதமாக டேஷ்போர்டு தொடங்கி கியர் லிவர் வரை மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை. இதுகுறித்த தகவல்கள் காரின் அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








