ஜனவரியில் 575 கியா கேரன்ஸ் எம்பிவி கார்கள் விற்பனை!! விலையே இன்னும் அறிவிக்கப்படலயே...
தென்கொரியாவை சேர்ந்த கியா இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளது. இப்படிப்பட்ட வளர்ந்துவரும் கார் பிராண்டில் இருந்து கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

கியா நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 19,319 கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1.4% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சற்று குறைவாக 19,056 கார்களையே கியா விற்பனை செய்திருந்தது.

அதேபோல் கியாவின் இந்த இந்திய விற்பனை எண்ணிக்கை முந்தைய 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 148% அதிகமாகும். ஏனென்றால், கடந்த டிசம்பர் மாதத்தில் வெறும் 7,797 கியா கார்களே விற்பனை செய்யப்பட்டன. 19,319 என்கிற விற்பனை எண்ணிக்கையின் மூலம் கடந்த ஜனவரி மாத கார்கள் விற்பனையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்தியில் ஐந்தாவது இடத்தை கியா பெற்றுள்ளது.

கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட 6.6 சதவீத கார்கள் கியா கார்களாகும். இது 2021 ஜனவரியை காட்டிலும் 0.3% அதிகம். அதாவது அந்த மாதத்தில் கியாவின் சந்தை பங்கு 6.3 சதவீதமாக இருந்தது. இந்திய சந்தையில் தற்சமயம் செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் மற்றும் கார்னிவல் என நான்கு கார்களை கியா விற்பனை செய்து வருகிறது.

இதில் வழக்கம்போல் செல்டோஸ் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மாடலான செல்டோஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 11,483 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2021 ஜனவரியில் 9,869 செல்டோஸ் கார்களையே கியா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் செல்டோஸ் கார்களின் விற்பனை இந்தியாவில் 16% அதிகரித்துள்ளது.

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில், கியாவின் சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் 6,904 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பலத்த போட்டி மிகுந்ததாக மாறிவரும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்த தென்கொரிய பிராண்டின் சார்பில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் சொனெட் கடந்த ஆண்டு ஜனவரியில் 8,859 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது.

இதன்படி வருடம்-வருடம் கணக்கிட்டு பார்க்கும்போது, சொனெட்டின் விற்பனை எண்ணிக்கை 22% குறைந்துள்ளது. கியா சொனெட் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாகவே புதியதாக அறிமுகம் செய்யப்படும் காரின் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும்.

இந்த வகையிலேயே 2021 ஜனவரியில் சொனெட்டின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 ஆயிரங்களை நெருங்கி இருந்தது. சொனெட்டிற்கு அடுத்து கியாவின் சமீபத்திய அறிமுகமான கேரன்ஸ் எம்பிவி 575 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த புதிய கியா எம்பிவி காரின் அதிகாரப்பூர்வ எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதன் பிறகே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காரை முன்பதிவு செய்ய ஆரம்பிப்பர். ஆனால் அதற்குள்ளாகவே 575 கேரன்ஸ் கார்கள் கடந்த மாதத்தில் கியா தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேரன்ஸில் 3 என்ஜின் தேர்வுகள் மற்றும் பல்வேறு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

10.25-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஒற்றை-மூடி சன்ரூஃப், வயர் இல்லா சார்ஜிங் மற்றும் ஆறு காற்றுப்பைகள் உள்ளிட்டவை கேரன்ஸில் வழங்கப்படும் சிறப்பம்சங்களாகும். இருப்பினும் கியாவின் மற்றொரு சொகுசு எம்பிவி காரான கார்னிவலை காட்டிலும் கேரன்ஸில் அம்சங்கள் குறைவே.

ஏனெனில் கார்னிவலின் விலைகள் அதிகம். இதனாலேயே மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கார்னிவல் லக்சரி-எம்பிவி கார்கள் இந்தியாவில் விற்பனையாகுகின்றன. கடந்த மாதத்தில் 357 கார்னிவல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் 9% குறைவாக 328 கார்னிவல் கார்களே விற்கப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications








