போட்றா வெடிய... கியா நிறுவனம் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
கியா நிறுவனம் செய்துள்ள தரமான சம்பவத்தால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் கியா இந்தியா நிறுவனம் தற்போது உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இனி இந்த தொழிற்சாலையில் இருந்து ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என கியா இந்தியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கார் உற்பத்தியில் கியா இந்தியா நிறுவனம் மூன்றாவது ஷிஃப்ட்டை சேர்த்துள்ளது. இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பாக கேரன்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் 4 கார்களை விற்பனை செய்து வருகிறது.

செல்டோஸ்தான் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் தயாரிப்பு. இது எஸ்யூவி ரக கார் ஆகும். இதை தொடர்ந்து கார்னிவல் மற்றும் சொனெட் ஆகிய கார்களை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை முறையே சொகுசு எம்பிவி மற்றும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும்.

இந்த கார்களுக்கு அடுத்தபடியாக வெகு சமீபத்தில் கேரன்ஸ் காரை கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஒட்டுமொத்தமாக 4 கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், அவை அனைத்திற்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் கியா கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கியா கார்களை முன்பை காட்டிலும் விரைவாகவே டெலிவரி பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டா-ஜின் பார்க் கூறுகையில், ''சர்வதேச அளவில் இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தைகளில் ஒன்று. இங்கு எங்களின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய வேண்டியது எங்களது கடமை.

மூன்றாவது ஷிஃப்ட் தொடங்கியிருப்பது அதனை உறுதி செய்யும்'' என்றார். கியா இந்திய நிறுவனம் அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தனது கார்களை இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அனந்த்ப்பூர் தொழிற்சாலையில் இருந்து மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா உள்பட பல்வேறு சந்தைகளுக்கு கியா நிறுவனம் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. எனவே அங்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம், அனந்த்ப்பூர் தொழிற்சாலை கியா நிறுவனத்தின் வெளிநாடுகளுக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தற்போது அனைத்து கண்களும் கியா கேரன்ஸ் காரின் மீதுதான் உள்ளன. எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களின் டிசைனை கலந்து கட்டி கியா கேரன்ஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களுடன் கியா கேரன்ஸ் போட்டியிடும்.

அத்துடன் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கும் கியா கேரன்ஸ் விற்பனையில் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை குறைவான வேரியண்ட்களுக்கு மட்டுமே கியா கேரன்ஸ் காரை போட்டியாளராக குறிப்பிட முடியும்.

கியா இந்தியா நிறுவனம் கேரன்ஸ் காருக்கு மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஐதராபாத் நகரை சேர்ந்த கியா இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஒன்று வெகு சமீபத்தில் ஒரே நாளில் 40 கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்து அசத்தியது. இந்த கார் கியா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








