ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி இத்தனை லக்சரி கார்களுக்கு சொந்தகாரரா!! எதுவுமே இந்தியாவில் இல்லை!
லலித் மோடி, இந்த பெயரை அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளின்போது இவரது பெயர் பலமாகவே அடிப்படும். ஏனெனில் இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் விரும்பி பார்க்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரினை முதன்முதலாக ஆரம்பிக்க அடிக்கல் நாட்டியவர் லலித் மோடி ஆவார்.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா என்கிற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராக விளங்கும் லலித் மோடி பல்வேறு பண மோசடிகளினால் இந்தியாவில் இருந்து தப்பித்து சென்று இலண்டனில் சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். பெரும் பணக்காரரான லலித் மோடியிடம் பல்வேறு லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
இந்த பிஎம்டபிள்யூ காரினை முதலாவதாக பார்ப்பதற்கு காரணம், இன்று இலண்டனில் பல சொகுசு கார்களுக்கு சொந்தகாரராக லலித் மோடி விளங்கினாலும், இந்தியாவில் இருந்த போது அடிக்கடி இவர் பயன்படுத்திய கார் பிஎம்டபிள்யூவின் 7 சீரிஸ் மாடலாகும். இந்த சொகுசு செடான் காரின் டாப் 760எல்ஐ வேரியண்ட் லலித் மோடியிடம் இருந்தது.

இந்தியாவில் இருந்த போது பயன்படுத்தியதால், இந்த பிஎம்டபிள்யூ கார் இன்னமும் இவரிடம் உள்ளதா என்பது தெரியவில்லை. லலித் மோடியின் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் காரில் 6-லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை புதியதாக வாங்கிய சமயத்தில் ரூ.1.96 கோடியாகும்.

பெண்ட்லீ முல்சன்னே ஸ்பீடு
லலித் மோடியின் பெண்ட்லீ முல்சன்னே ஸ்பீடு காரின் படங்கள் அவ்வளவாக இணையத்தில் இல்லை. பின்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரே ஒரு படம் மட்டுமே இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. பொதுவாகவே லலித் மோடி புதிய புதிய லக்சரி கார்களை வாங்குவதில் எந்த அளவில் ஆர்வமிக்கவரோ, அதே அளவிற்கு காரின் நம்பர் ப்ளேட்டிலும் தனக்கு பிடித்தமான எழுத்துகளையும், எண்களையும் சேர்ப்பதில் ஈடுப்பாடு கொண்டவர்.
கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் லலித் மோடியின் இந்த பெண்ட்லீ காரில் 6.75 லிட்டர் வி8 இரட்டை-டர்போ என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் சுமார் 1200 என்எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெண்ட்லீ முல்சன்னே ஸ்பீடு கார்களின் தயாரிப்பு & விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டதால், வெளிநாடுகளில் கூட இந்த காரினை சாலையில் காண்பது அரிதானது ஆகும்.

ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர்
விசித்திரமான நம்பர் ப்ளேட் எண் உடன் லலித் மோடியிடம் இருக்கும் கார்களுள் ஒன்று ஃபெராரி 488 பிஸ்டா ஸ்பைடர் ஆகும். ஏனெனில் இதன் நம்பர் ப்ளேட்டில் லலித் மோடியின் பெயரை குறிக்கும் வகையில் ‘MOD IR' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிசெயல்திறன்மிக்க ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரான இதனை நீல நிறத்தில், அர்ஜெண்டோ ஸ்டைலில் லலித் மோடி கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வாங்கினார்.

இதில் பொருத்தப்பட்டுள்ள 3.9 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் டர்போ தடை இல்லாமல் உடனடி இயக்க ஆற்றல் விநியோகத்திற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 1.5 டன் எடை கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும். இதன் டாப்-ஸ்பீடு 340kmph ஆகும்.

ஃபெராரி எஃப்12 பெர்லினெட்டா
லலித் மோடியின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் பரிசாக வழங்கிய கார் ஃபெராரி எஃப்12 பெர்லினெட்டா ஆகும். இதன் நம்பர் ப்ளேட்டிலும் பணம் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த காரின் நம்பர் ப்ளேட்டில் 'CRI3KET' என எண்ணை வாங்கியுள்ளனர். இது கிரிக்கெட்டை குறிப்பதுபோல் உள்ளது.

எஃப்12 இந்தியாவில் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்தால், இதன் விலை ரூ.5 கோடி என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம். இதில் வி12 நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 730 எச்பி மற்றும் 690 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மெக்லாரன் 720எஸ்
அப்பாவிற்கு மகன் ஒரு காரை பரிசாக வழங்கியதுபோல், மகனுக்கு அப்பா புதிய மெக்லாரன் 720எஸ் காரினை பரிசளித்துள்ளார். இதனை லலித் மோடி தனது இன்ஸ்டாகிராமிலும் தெரிவித்திருந்தார். 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜினை பெற்றுள்ள இந்த கார் 100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.


Click it and Unblock the Notifications