காஸ்ட்லியான லம்போர்கினி கார்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... இந்த விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா நம்ப மாட்டீங்க
லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் தற்போது இந்திய சந்தையில், விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் 400 கார்களை டெலிவரி செய்திருப்பதுதான் அந்த புதிய மைல்கல் ஆகும். லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2007ம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக தனது வியாபாரத்தை தொடங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 400 கார்கள் டெலிவரி என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சராசரியாக பார்த்தால் ஒரு ஆண்டுக்கு சுமார் 26-27 கார்களை லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. லம்போர்கினி போன்ற விலை உயர்ந்த கார்கள் இந்த அளவிற்கு விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் தற்போது லம்போர்கினி நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் 86 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இந்திய சந்தையில் தனது அதிகபட்ச வருடாந்திர விற்பனையை லம்போர்கினி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டுதான் பதிவு செய்திருந்தது.

இதற்கு முன்பாக 2019ம் ஆண்டு 52 கார்களை விற்பனை செய்திருந்ததுதான் இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகபட்ச வருடாந்திர விற்பனை எண்ணிக்கையாக இருந்து வந்தது. இதற்கிடையே இந்திய சந்தையில் 300 கார்கள் டெலிவரி என்ற எண்ணிக்கையில் இருந்து 400 கார்கள் டெலிவரி என்ற மைல்கல்லை அடைவதற்கு லம்போர்கினி நிறுவனம் ஒரு ஆண்டை கூட எடுத்து கொள்ளவில்லை.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் 300 கார்கள் டெலிவரி என்ற மைல்கல்லை கடந்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி இன்னும் முழுமையாக ஒரு ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள்ளாக லம்போர்கினி நிறுவனம் 400 கார்கள் டெலிவரி என்ற மைல்கல்லை கடந்திருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், கடைசி 6 மாதங்களில் மட்டும் (2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரை) லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் 100 கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகி வரும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களில் ஒன்று என்ற பெருமையை உருஸ் பெற்றுள்ளது.

இந்தியாவில் 100 லம்போர்கினி உருஸ் கார்கள் விற்பனை என்ற மைல்கல் கடந்த 2021ம் ஆண்டே எட்டப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் 100 உருஸ் கார்கள் விற்பனை என்ற விற்பனை மைல்கல்லை லம்போர்கினி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதமே எட்டி விட்டது. அதன்பின்னர் தற்போது ஓராண்டு கடந்து விட்டதால், லம்போர்கினி உருஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கலாம்.

இந்தியாவில் எவ்வளவு லம்போர்கினி உருஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லம்போர்கினி உருஸ் கார் இந்திய சந்தையில் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 650 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தி, சாலையில் சீறிப்பாய்ந்து செல்ல கூடியது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற காராகவும், லம்போர்கினி உருஸ் திகழ்கிறது. இந்தியர்கள் பொதுவாகவே எஸ்யூவி கார்களை விரும்பக்கூடியவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் நிறைய கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி, ஃபுல்-சைஸ் எஸ்யூவி என எஸ்யூவி ரகத்தை எந்த உட்பிரிவை எடுத்து கொண்டாலும், கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இதன்படி விலை உயர்ந்த செக்மெண்ட்டை சேர்ந்த லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரும் விற்பனையில் தன்னை நிரூபித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 3.15 கோடி ரூபாய் முதல் 3.43 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் லம்போர்கினி உருஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.


Click it and Unblock the Notifications








