லம்போர்கினி கார்களுக்கு உலகளவில் இப்படியொரு தேவையா!! இப்போ புக் பண்ணாலும் டெலிவிரி 2024இல் தானாம்...
2024ஆம் ஆண்டு வரையில் டெலிவிரி செய்வதற்கான தங்களது கார்கள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டு விட்டதாக லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அந்த அளவிற்கு லம்போர்கினி கார்களுக்கு தேவை உள்ளதா? எவ்வாறு இது சாத்தியமாயிற்று என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்து முடிந்த கொரோனா காலக்கட்டத்தை எவர் ஒருவரும் தனது வாழ்நாளில் மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோன்று ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மறக்காது. ஏனெனில் கொரோனா வைரஸ் பரவலினால் தொழிற்சாலைகள் மூடல், வாகன பாகங்கள் விநியோக சங்கிலியில் தடைகள் என ஏகப்பட்ட இன்னல்களை அந்த சமயத்தில் அவை சந்தித்தன.

சரி அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதா... அதுதான் இல்லை. ஊரடங்கு உத்தரவுகளால், குறைக்கடத்திகளை தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை மூட, அதன் விளைவாக உலகளவில் ஏற்பட்ட சிப்-கள் பற்றாக்குறை தற்போதுவரையில் எதிரொலித்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தற்கால மாடர்ன் கார்கள் உற்பத்தியில் சிப்-கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன.

இந்த விஷயத்தில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான சுஸுகி, டொயோட்டா கூட பலத்த சறுக்கல்களை சந்தித்தன. ஆனால் சிப்-கள் பற்றாக்குறையில் தாங்கள் பெரிய அளவில் சறுக்கல்களை சந்திக்கவில்லை எனவும், உலகளவில் தங்களது வாகனங்களுக்கு பெரிய அளவில் தேவை உருவாகி உள்ளதாகவும் ஆச்சிரியமளிக்கும் வகையில் லம்போர்கினி தெரிவித்துள்ளது.

எந்த அளவிற்கு தேவை என்றால், லம்போர்கினி கார் ஒன்றை நீங்கள் இன்று முன்பதிவு செய்தீர்கள் எனில், குறைந்தப்பட்சம் 18 மாதங்களுக்கு பிறகே டெலிவிரி பெற முடியும். அதாவது அடுத்த 2023ஆம் ஆண்டு இல்லாமல், 2024இல் தான் அந்த லம்போர்கினி கார் உங்களது கைக்கு வந்து சேருமாம். இத்தாலி நாட்டை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தங்களது கார்களுக்கு உலகளவில் நிலவிவரும் தேவை குறித்து லம்போர்கினி நிறுவனத்தின் சிஇஒ ஸ்டீஃபன் விங்கெல்மன் சமீபத்தில் தனியார் செய்தித்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "இந்த லக்சரி கார் பிராண்ட் அதிகப்படியான தேவையை சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு துவக்கம் வரையில் டெலிவிரி செய்வதற்கான கார்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

ஏனெனில் அவர்கள் (வாடிக்கையாளர்கள்) பிராண்டை நம்புகிறார்கள். எவ்வளவு அழகான கார்கள் அவை என்பதையும், எந்த அளவிற்கு அதி செயல்திறன்மிக்க கார்கள் அவை என்பதையும் அவர்கள் பார்க்கிறார்கள்" என்றார். மேலும், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரினால் பொருளாதார ரீதியாக சறுக்கல்களை சந்தித்த போதிலும் ஆடம்பரத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் கார் விஷயத்தில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாக லம்போர்கினி தங்களது கார்களுக்கு உள்ள தேவைக்கான காரணமாக தெரிவிக்கிறது.

இத்தகைய சூழல் அப்படியே தொடர்ந்தால் மிக அதிகப்படியான தேவையையும் தாங்கள் காண வாய்ப்புள்ளதாக லம்போர்கினி நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. இருப்பினும் சிப்-கள் பற்றாக்குறையால் லம்போர்கினி நிறுவனம் சற்று இன்னல்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக சிப்-கள் அதிகளவில் தேவைப்படுகின்ற புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கால தாமதம் ஏற்படுகிறது என்கிறது லம்போர்கினி.

மேலும், சிப்-கள் பற்றாக்குறையால் தங்களது சில கார்களுக்கு அதிகப்படியான காத்திருப்பு காலம் நிர்ணயித்துள்ளதாகவும் லம்போர்கினி தெரிவிக்கிறது. ஆதலால், தற்போது லம்போர்கினி காரை முன்பதிவு செய்தால் 2024இல் தான் டெலிவிரி செய்யப்படும் என்பதற்கு சிப்-கள் பற்றாக்குறையும் ஒரு காரணம் எனலாம்.

இதனையும் ஒப்புக்கொண்ட விங்கெல்மன், "எந்த அளவிற்கு விரைவாக முடிகிறதோ அந்த அளவிற்கு அனைத்தையும் அப்டேட் செய்யவும், பாஸிட்டீவ் விஷயமாக மாற்றவும் முயற்சிக்கிறோம்" என்றார். உலகளவில் கார்கள் விற்பனையில் முன்னேற்றம் கண்டுவரும் லம்போர்கினி நிறுவனம் 2024ஆம் ஆண்டிற்குள்ளாக தனது அனைத்து மாடல்களிலும் ஹைப்ரீட் வெர்சனை அறிமுகப்படுத்தவும், 2025-க்கு உள்ளாக தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








