3 செகண்ட்ல 100 கிலோ மீட்டர் ஸ்பீடை டச் பண்ணீரும்... இந்தியாவில் அறிமுகமான இந்த காரின் விலை ஜஸ்ட் 4 கோடிதான்!
லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 4.04 கோடி ரூபாய் என்ற திகைக்க வைக்கும் விலையில் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan EVO) மற்றும் லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ (Lamborghini Huracan STO) ஆகிய கார்களுக்கு இடையில், புதிய லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3) காருடன், லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா விற்பனையில் போட்டியிடும்.

புதிய லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் கடந்த ஏப்ரல் மாதம்தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நடைபெற்று சுமார் 5 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதற்குள்ளாக இந்திய சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹூராகேன் டெக்னிகா காருக்கு ஒரு சில முன்பதிவுகளை பெற்று விட்டது.

ஆனால் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எத்தனை பேர் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரை முன்பதிவு செய்துள்ளனர்? என்ற துல்லியமான தகவல் வெளியாகவில்லை. லம்போர்கினி ஹூராகேன் எவோ மற்றும் லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ ஆகிய கார்களை தொடர்ந்து, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்றாவது ஹூராகேன் மாடல் என்ற பெருமையை லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா பெற்றுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் 5.2 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 634 பிஹெச்பி பவர் மற்றும் 565 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலம் காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார் வெறும் 9.1 வினாடிகளில் எட்டி விடும் திறனை பெற்றுள்ளது.

அதே சமயம் லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா கார், மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் என்பதை அதன் செயல்திறனை பற்றிய இந்த புள்ளி விபரங்கள் நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

சாலைகளில் ஓட்டக்கூடிய இந்த சூப்பர்கார் ரேஸ் ட்ராக்குகளில் பயன்படுத்தக்கூடிய கார்களை போன்ற செயல்திறனை வெளிப்படுத்த கூடியது. இதன் காரணமாகவே மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா காருக்கு இந்திய சந்தையிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கருதப்படுகிறது.

முந்தைய நாட்களில் எல்லாம் இதுபோன்ற சூப்பர் கார்களை இந்திய சாலைகளில் பார்ப்பது என்பதே மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மிகவும் வேகமாக மாறி கொண்டுள்ளது. லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் தற்போது இந்திய சாலைகளில் நம் கண்களுக்கு மிகவும் அதிகமாக தென்படுகின்றன.

குறிப்பாக லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் (Lamborghini Urus) கார் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட உருஸ் கார்களை விற்பனை செய்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








