வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்றாங்க... லெஃப்ட்-ஹேண்ட்-டிரைவ் ஸ்கோடா குஷாக் காரின் உற்பத்தி தொடங்கியது!
இடது கை டிரைவ் ஸ்கோடா குஷாக் காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited) நிறுவனம், இடது கை டிரைவ் ஸ்கோடா குஷாக் (Left-hand-drive Skoda Kushaq) காரின் உற்பத்தியை தற்போது தொடங்கியுள்ளது. இந்தியாவில் வலது கை டிரைவ் (Right-hand Drive) நடைமுறை அமலில் உள்ள நிலையில், இந்த இடது கை டிரைவ் ஸ்கோடா குஷாக் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்தியா 2.0 (India 2.0) திட்டத்தின் கீழ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் ஸ்கோடா குஷாக்தான். இதை தொடர்ந்துதான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் தொடங்கியது. இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 3 ஆயிரம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் மெக்ஸிகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சரி, ஸ்கோடா குஷாக் காருக்கு வருவோம். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஸ்கோடா குஷாக் கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆக்டிவ் (Active), ஆம்பிஷன் (Ambition), ஆம்பிஷன் க்ளாசிக் (Ambition Classic), ஸ்டைல் (Style) மற்றும் மாண்டீ கார்லோ (Monte Carlo) ஆகிய வெர்ஷன்களில் ஸ்கோடா குஷாக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த மாதம் ஸ்கோடா குஷாக் காரில் வழங்கப்படும் வசதிகளை மறுசீரமைப்பு செய்தது. தற்போது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகள் ஸ்கோடா குஷாக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில் ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரில் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் இதே குழுமத்தை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கும் ஸ்கோடா குஷாக் கார் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. மேலும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காருடனும் ஸ்கோடா குஷாக் கார் போட்டியிடும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம்.

தற்போது வெளியாகியுள்ள இந்த காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம். இதற்கிடையே ஸ்கோடா குஷாக் காருக்கு இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்கோடா குஷாக் மட்டுமல்லாது, இந்த குழுமத்தில் இருந்து வெளிவந்துள்ள புதிய தயாரிப்புகளான ஸ்கோடா ஸ்லாவியா செடான், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய கார்களுக்கும் இந்திய சந்தையில் தற்போது பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








