மழைநீரால் கார் ஸ்டார்ட் ஆகலயா? சர்வீஸ் முடியும் வரை வேறொரு கார் தரும் பிரபல கார் நிறுவனம்!! எங்கு தெரியுமா?
பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் பொருட்டாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. எந்த நிறுவனம் அது? எந்த மாதிரியான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது? என்பது குறித்த விபரங்களை முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மழை எந்த அளவிற்கு நன்மை தரும் விஷயமாக உள்ளதோ, அந்த அளவிற்கு சில பகுதி மக்களுக்கு வேதனை தரும் விஷயமாகவும் மாறிவிடுகிறது. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக பெய்யும் கனமழை என்றாலே மாநகரங்களில் வசிப்போர் பதற ஆரம்பித்துவிடுகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் மழையால் அவர்கள் கண்டிருக்கும் அனுபவங்கள் அவ்வாறானவை.

சில வருடங்களுக்கு முன்னர், கனமழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் திறந்துவிடப்பட்ட ஏரியால் சென்னையே நீரில் மூழ்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட இதேபோன்றதான சூழலை தான் சமீப நாட்களாக இந்தியாவின் மென்பொருள் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூருவும் எதிர்கொண்டு வருகிறது.

அதற்காக, முழு பெங்களூரு நகரமும் மழை நீரால் தத்தளித்து வருவதாக நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் பெங்களூரூவில் கனமழை பெய்த போதிலும் தற்சமயம் பல பகுதிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளினால் சாலையில் மழை நீர் தேங்குவது இல்லை. ஆனால் மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், ஒயிட் ஃபீல்டு உள்ளிட்ட ஐடி நிறுவனங்களால் சமீப ஆண்டுகளில் பெங்களூருவில் முக்கிய பகுதிகளானவை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பொதுவாக, அதிகப்படியான மழைநீர் மக்களை எவ்வாறு பாதிக்கிறதோ அதற்கு இணையாக வாகனங்களையும், அவற்றிற்குள் இருக்கும் பாகங்களையும் சேதப்படுத்துகின்றன. பெங்களூருவிலும் சாலையிலும் வீட்டு வளாகத்திற்கு உள்ளேயும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதனால், இவற்றை மீண்டும் எவ்வாறு பழைய நிலைமைக்கு கொண்டுவருவது என்பதுதான் தற்சமயம் பல வாடிக்கையாளர்களின் கவலையாக உள்ளது.

இதனை புரிந்துக்கொண்ட லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் உதவிகளை மழைநீரால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை கருத்தில்கொண்டு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, 'லெக்ஸஸ் அக்கறை தொகுப்பு' என்கிற நடவடிக்கையை லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

பெங்களூரில் மழைநீரால், அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பாதிப்படைந்த தனது வாடிக்கையாளர்களின் லெக்ஸஸ் கார்களின் பழுதுபார்ப்பிற்கு ஸ்பெஷல் உதவிகளையும், கார் பாகங்களுக்கு சிறந்த விலையையும் வழங்குவது லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாகும்.

அதேபோல், இந்த குறிப்பிட்ட காலத்தில் மழைநீரால் பெங்களூருவில் சேதமடைந்த லெக்ஸஸ் கார்களை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து பெற்று, அவற்றை பழுது பார்த்து விரைவாக டெலிவிரி செய்வது என்கிற முனைப்பில் லெக்ஸஸ் உள்ளது. இவற்றை காட்டிலும் முக்கியமாக, இந்த நடவடிக்கையின்படி சில வாடிக்கையாளர்கள் பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்று முடியும்வரையில் பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக லெக்ஸஸ் கார்களையும் பெறவுள்ளனர்.

ஆனால் இவ்வாறு தற்காலிகமாக வேறொரு லெக்ஸஸ் காரை பெற வேண்டுமென்றால், உங்களது கார் மழைநீரால் பெரிய அளவில் பாதிப்படைந்து, நகர்த்தவே முடியாத நிலையில் இருக்க வேண்டும் என லெக்ஸஸ் தெரிவித்துள்ளது. இவற்றுடன் லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய 'லெக்ஸஸ் அக்கறை தொகுப்பு' மூலமாக கார் பாகங்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியத்திலும் வாடிக்கையாளர்கள் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் பெற முடியும்.

இவை மட்டுமின்றி, எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல், விரிவான கார் வெளிப்புற & உட்புற சரிப்பார்ப்பு தொகுப்பையும் தனது வாடிக்கையாளர்களுக்கு லெக்ஸஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இவை அனைத்தும், வாடிக்கையாளர்கள் தங்களது உரிமையாளர் உணர்வை எந்தவொரு தடையும் இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்ற லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் குறிக்கோளிற்கு இணங்க அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மழைநீரால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க பெறும் இந்த சலுகைகள் & உதவிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள லெக்ஸஸ் டீலர்ஷிப் மையத்தினை தொடர்பு கொள்ளவும். இதேபோன்று, ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார்கள் இந்தியாவும் நிறுவனமும் பெங்களூருவில் மழைநீரால் பாதிப்படைந்த தனது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








