ரோல்ஸ் ராய்ஸ்லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல போலிருக்கே.. விலையும்கூட கம்மிதான்! லெக்சஸ் எல்எக்ஸ் அறிமுகம்!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லெக்சஸ் இந்தியாவில் அதன் மிக மிக விலைக் கொண்ட சொகுசு கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எல்எக்ஸ் 500டி எனும் புதுமுக லக்சூரி கார் மாடலையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது. இந்த காரின் டெலிவரி பணிகள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஜனவரி - மார்ச் ஆகிய இரு மாதங்களுக்குள் எல்எக்ஸ் கார் மாடலின் டெலிவரி பணிகள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொகுசு காருக்கு அறிமுகமாக ரூ. 2.82 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிகவும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த காராக எல்எக்ஸ் 500டி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் தோற்றம் மிகவும் ஆர்பாட்டம் நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றது.

முற்றிலும் மாறுபட்ட மற்றும் முரட்டுத் தனமான தோற்றத்திலேயே எல்எக்ஸ் 500டி சொகுசு கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாக முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் க்ரில் உள்ளது. கிடைமட்டமாக கிடத்தப்பட்ட ஸ்லேட் போன்ற க்ரில்லே காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக எல்இடி ஹெட்லைட் நான்கு புரஜெக்டர் எல்இடி லைட்டுகளுடன் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகளும் இங்கேயே பொருத்தப்பட்டு உள்ளன. இவை அனைத்தும்தான் காரின் கவர்ச்சிகரமான அழகிற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. இதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் விண்டோ லைன் மற்றும் 22 அங்குல அலாய் வீல்கள் எல்எக்ஸ் 500டி காரில் வழங்கப்பட்டுள்ளன. காரின் முன் பக்கம் மட்டுமின்றி பின் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதியும் அதிக கவர்ச்சிகரமானதாகக் காட்சியளிக்கின்றது.

இதேபோல், காரின் வெளிப்புறத்தில் கவர்ச்சியான தோற்றத்திற்கான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ, அதேபோல் காரின் உட்பக்கத்தில் சொகுசுக்கான அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றன. காருக்குள் இரு திரைகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒன்று 12.2 அங்குலத்திலும், மற்றொன்று 7 அங்குலத்திலும் வழங்கப்பட்டு உள்ளது.
இதில் பெரிய திரை தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். சிறியது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகும். இதுதவிர, 4 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன்பக்க இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜிங், பின் பக்க இருக்கையாளர்களுக்கு என தனி திரை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. பின் பக்க இருக்கையாளர்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் திரை 11.6 அங்குலம் அளவுக் கொண்டது.

இது தொடுதிரை வசதிக் கொண்டது. ஒயர்லெஸ் ரிமோட் கன்ட்ரோல் வசதியும் இந்த திரையில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க இந்த காரை வாடிக்கையாளர்கள் நான்கு விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. காரின் உட்பக்கத்திற்கே இந்த அளவு மிக தாராளமான நிற தேர்வை லெக்சஸ் வழங்குகின்றது. ஹசல், கருப்பு, கிரிம்ஸன் மற்றும் வெள்ளை- டார்க் செஃபியா ஆகிய நிற தேர்வுகளிலேயே அது வழங்கப்படும்.
இவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் எக்கசக்கமாக வழங்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக அடாஸ் எனப்படும் அட்வானஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்பட்டிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக பின் வரும் வாகனம் நம்மை கிராஸ் செய்து செல்லும்போது அலர்டை வழங்குதல், அவசர நேரங்களில் பிரேக் பிடித்தல் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, டயர் பிரஷ்ஷர் மானிட்டர், பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர், 360 டிகிரி கேமிரா உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும். மோட்டாரை பொருத்தவரை இந்த காரில் 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரே லேண்ட் க்ரூஸர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 309 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது அனைத்து வீல்களுக்கும் இயக்க அனுபவத்தைக் கடத்தும். இத்துடன், அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதாகவும் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது எல்எக்ஸ் 500டி காருடன் சேர்த்து ஆர்எக்ஸ் எஸ்யூவி மற்றும் எல்சி கூபே ஆகிய கார் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications









