இந்த 25 கார்கள் தான் 2023-ஐ கலக்க போகுது! எல்லாமே வேற லெவல் காரா இருக்குதே!
2022ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நாம் இப்பொழுது இருக்கிறோம். 2023ம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் பிறக்கவுள்ளது. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய சரிவைச் சந்தித்து மீண்டு வந்துள்ளது. இதற்கு ஏகப்பட்ட புதிய கார்களின் வருகை ஒர முக்கியமான காரணமாக இருக்கிறது. கொரோனாவிற்கு முந்தைய விற்பனையையே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது தான் மீண்டும் எட்டி பிடித்துள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆட்டோமொபைல் துறையைப் பயணிக்க வைக்க பல புதிய கார்களின் வருகை அவசியம். அதற்காக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் உள்ள ஏராளமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடத் தயாராக இருக்கின்றனர். அதன்படி மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிடுகின்றனர்.

அதே நேரத்தில் மஹிந்திரா, ஹோண்டா, சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. தற்போது இந்த பதிவில் நாம் வரும் 2023ம் ஆண்டு ஆட்டோமொபைல்துறைக்கு மிக முக்கிய ஆண்டாக இருக்கும் நிலையில் இந்த 2023ம் ஆண்டில் விற்பனைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ள கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.
மாருதி கார்கள் 2023
மாருதி பலேனோ கிராஸ்
மாருதி ஜிம்னி 5 டோர்
புதிய மாருதிஎம்பிவி
மாருதி நிறுவனம் 2 எஸ்யூவி மற்றும் ஒரு 3 வரிசை சீட்கள் கொண்ட எம்பிவி காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஒரு எஸ்யூவி கூபே ஸ்டைலை கொண்ட மாருதி பலேனோ கிராஸ் கார் இதை அந்நிறுவனம் ஒய்டிபி என்ற கோட் பெயரை வைத்துள்ளது. அடுத்தது. 5 டோர் கொண்ட ஜிம்னி லைஃப்ஸ்டைல் ஆஃப்ரோடு எஸ்யூவி கார் இந்த இரண்டு காரும் 2023ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும், இது போக 2023 தீபாவளியைக் குறி வைத்து இன்னோவாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு 3 வரிசை சீட் கொண்ட எம்பிவி காருக்கும் மாருதி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ஹூண்டாய் கார்கள் 2023
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்
புதிய ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் ஏஐ3 எஸ்யூவி
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் இந்நிறுவனம் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த 2 காரிலும் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இடம் பெறவுள்ளன. இது போக ஹூண்டாய் நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி காராக ஒரு காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏஐ3 சியூவி எனப் பெயரிட்டுள்ளது. இது டாடா பஞ்ச் காருக்கு போட்டியாகக் களம் இறங்கும். இது போக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரையும் டெஸ்ட் செய்து வருகிறது.
டாடா கார்கள் 2023
டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்
டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக்
டாடா பஞ்ச் இவி
டாடா நிறுவனம் இந்தாண்டு மொத்தம் 4 கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 2 கார்கள் அதில் எலெக்ட்ரிக் கார்கள்தான். இதில் ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் காரை 2023ம் ஆண்டு பாதிக்கு பிறகு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தப்படலாம். இது போக அல்ட்ராஸ் மற்றும் பஞ்ச் காரின் இவி வெர்ஷனையும் 2023ம் ஆண்டுதான் இந்நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த கார்கள் நெக்ஸான் இவி மோட்டாரை கொண்டதாக இருக்கம். இந்த கார்கள் முழு சார்ஜில் 300 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டவை எனத் தெரியவந்துள்ளது.
மஹிந்திரா கார்கள் 2023
மஹிந்திர தார் 5-டோர்
மஹிந்திரா பொலேரோ நியோ பிளஸ் ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி
நீண்டகாலமாக மக்கள் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி காரை அந்நிறுவனம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது போக மஹிந்திரா தார் 5 டோர் கார் நீளமான வீல் பேஸ் உடன் 2023ம் ஆண்டு தான் வெளியாகிறது. இது ஸ்கார்பியோ என் காரை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இது போக மஹிந்திரா நிறுவனம் பொலேரோ நியோ பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் காரையும் 2023ம் ஆண்டே விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது.
கியா கார்கள் 2023
புதிய தலைமுறை கியா கார்னிவெல்
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
கியா 2023ம் ஆண்டு வெளியிட 2 கார்களை தான் தற்போது முடிவு செய்துள்ளது. புதிய தலைமுறை கியா கார்னிவெல் மற்றும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரண்டு கார்களும் ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகமாகும் எனத் தெரிகிறது. இரண்டு கார்களிலும் பல புதிய அப்டேட்டகள் மற்றும் அம்சங்கள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொயோட்டா கார்கள் 2023
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
டொயோட்டா எஸ்யூவி கூபே
டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தனது ஹைகிராஸ் காரை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்திவிட்டது. தற்போது இந்த காரை அந்நிறுவனம் 2023ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்போகிறது. இந்த காரின் விலையும் 2023ம்ஆண்டு தான் வெளியாகும் என தெரிகிறது. இது போக மாருதி பலேனோ கிராஸ் காரை அடிப்படையாகக் கொண்ட டொயோட்டா காரும் வரும் 2023ம் ஆண்டு தான் வெளியாகவுள்ளது. தற்போது உள்ள தகவலின்படி டொயோட்டா அடுத்த ஆண்டிற்கு 2 கார்களை தான் திட்டமிட்டுள்ளனர்.
ஹோண்டா கார்கள் 2023
புதிய காம்பேக்ட் எஸ்யூவி
ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்
ஹோண்டா நிறுவனம் பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவி செக்ஸ்மெண்டில் தனது புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஸ்டிராங்க் ஹைபிரிட் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக இந்த 2023ம் ஆண்டு ஹோண்டா சிட்டி காருக்கும் ஒரு மிட்-லைஃப் பேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சிட்ரோன் கார்கள் 2023
சிட்ரோன் இசி3
சிட்ரோன் 7 சீட்டர் யூவி
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் தான் களம் இறங்கி தங்கள் கார்களை தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இசி3 காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோக சி3 காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு 7 சீட்டர் யூவி காரையும் அந்நிறுவனம் 2023ம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இது கியா கேரன்ஸ், மற்றும் மாருதி எக்ஸ்எல்6 காருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
நிஸான் மற்றும் எம்ஜி கார்கள் 2023
நிஸான் எக்ஸ்-டிரையல்
எம்ஜி ஏர்- ஸ்மால் இவி
நிஸான் நிறுவனம் தனது எக்ஸ்-டிரையல் எஸ்யூவி காரை இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் 2023 ஆட்டோஎக்ஸ்போவில் தனது எம்ஜி ஏர்இவி காரை இந்தியாவின் விலை குறைந்த இவி காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் எம்ஜி நிறுவனத்தின் இந்த சிறிய காருக்கு மார்கெட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications








