அடுத்ததாக விற்பனைக்கு வரும் டீசல் கார்கள் இவைதான்!! ஜீப் மெரிடியன் முதல் 5-கதவு ஃபோர்ஸ் குர்கா வரையில்!
கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளினால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று கேட்டால், கட்டாயத்தினால் அனைத்து வாகனங்களிலும் பிஎஸ்6-க்கு இணக்கமான அப்டேட் செய்யப்பட்ட என்ஜின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது, புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளினால் டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஏனெனில் பெட்ரோல் என்ஜின்களை காட்டிலும் டீசல் என்ஜின்களை தற்போதைய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக மேம்படுத்துவது சற்று செலவு மிகுந்த காரியமாகவும், இதன் விளைவாக கார்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றன.

இதனை மனதில் வைத்துக்கொண்டே மாருதி சுஸுகி போன்ற அதிகளவில் பயணிகள் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் கூட டீசல் கார்களை உருவாக்க இப்போதுவரையிலும் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் புதியதாக டீசல் கார்கள் எதுவும் வெளியாக போவதில்லையா என்கிற கேள்வி இந்நேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும். அதனை தீர்க்கும் விதமாகவே அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள சில டீசல் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜீப் மெரிடியன்
அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்தியாவில் அதன் புதிய 7-இருக்கை எஸ்யூவி காரினை மெரிடியன் என்கிற பெயரில் நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 5-இருக்கை ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் 7-இருக்கை வெர்சன் தான் மெரிடியன் என்ற பெயரில் வெளிவரவுள்ளது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

புதிய ஜீப் மெரிடியனில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் அமைப்புடன் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 200 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மெரிடியனில் டிரான்ஸ்மிஷனுக்கு அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ
தற்சமயம் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இருக்கும் கார்களில் புதிய தலைமுறை ஸ்கார்பியோவும் ஒன்றாகும். ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு மஹிந்திராவின் இந்த பிரபலமான எஸ்யூவி மாடல் அப்டேட்களை பெற உள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்திய இரண்டாம்-தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதினால், புதிய ஸ்கார்பியோவின் மீதும் மிகுந்த நம்பிக்கையை மஹிந்திரா வைத்துள்ளது.

புதிய தலைமுறை ஸ்கார்பியோவில் புதிய தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகளை தான் மஹிந்திரா வழங்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் டர்போ-டீசல் என்ஜின் ஆனது 130 பிஎச்பி & 155 பிஎச்பி என இரு விதமான நிலைகளில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்
கடைசி தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் கடந்த 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்தில் இருந்து கடந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் வரையில் க்ரெட்டா விற்பனையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக சற்று கீழிறங்கியுள்ள க்ரெட்டாவின் விற்பனையை சீரமைக்கும் விதமாக க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஹூண்டாய் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

தற்கால மாடர்ன் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறி வருகின்ற அதிநவீன ஓட்டுனர் உதவி தொகுப்பு (ADAS) -ஐ பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய க்ரெட்டாவிலும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் உள்பட தற்போதைய அதே 3 என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

5-கதவு ஃபோர்ஸ் குர்கா
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீப மாதங்களாக குர்கா எஸ்யூவி வாகனத்தின் நீண்ட வீல்பேஸ் கொண்ட வெர்சனை சோதனை செய்து வருவதை ஸ்பை படங்களின் மூலம் பார்த்து வருகிறோம். மொத்தம் மூன்று வரிசைகளில் கொண்டுவரப்பட உள்ள புதிய குர்கா வாகனத்தில் கேப்டன் இருக்கைகள் 2ஆம் மற்றும் 3ஆம் வரிசைகளில் வழங்கப்பட உள்ளன.

இயக்க ஆற்றலை பெற 3-கதவு குர்காவின் அதே 2.6 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தான் புதிய 5-கதவு குர்காவிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 90 பிஎச்பி 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான குர்காவின் புதிய 5-கதவு வெர்சனும் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிறப்பு இணைப்பு
கியா கேரன்ஸ் எம்பிவி
தென்கொரிய கியா பிராண்டில் இருந்து இந்தியாவில் மிக சமீபத்தில் விற்பனை வந்த மாடர்ன் கார் கேரன்ஸ் ஆகும். அளவில் பெரிய எம்பிவி காரான இதிலும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த டர்போ-டீசல் என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால் டீசல் என்ஜினில் காரை வாங்க விரும்புபவர்கள் கேரன்ஸையும் தேர்வு செய்ய பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








