2022 இல் விபத்தில் சிக்கிய முக்கிய பிரபலங்கள்... அட இந்த பிரபலம் எப்போங்க விபத்துல சிக்கினாங்க?..
ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதேனும் ஓர் மூலையில் விபத்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனால் உயிர்கள் அதிகம் பலியாகிக் கொண்டு இருப்பதால் அரசு விபத்துகளைத் தவிர்க்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் வருகின்றது. இருந்த போதிலும் பெரிய அளவில் தீர்வு கிடைக்காத சூழலே நாட்டில் தென்படுகின்றது.
போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. 2022 லும் போக்குவரத்து விதிமீறல்களால் அதிகளவில் விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் மிக அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது. 2021 ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4,12,432 சாலை விபத்துகள் நாட்டில் அரங்கேறி இருப்பதாக அரசு வெளியிட்ட சமீபத்திய புள்ளி விபரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. 1,53,972 பேர் வரை விபத்துகளினால் 2021 பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டை போலவே நடப்பு 2022 ஆம் ஆண்டிலும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தினந்தோறும் விபத்துகள் பற்றிய விபரங்கள் செய்திகளில் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த ஆண்டில் பிரபலங்கள் அதிகளவில் விபத்தைச் சந்தித்தித்து இருப்பதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. அந்தவகையில், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய சில பிரபலங்களின் விபத்து நிகழ்வு பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
நடிகை ரம்பா விபத்து:
ஆமாங்க, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவரான ரம்பாவேதான். நடப்பாண்டில் கடுமையான விபத்தைச் சந்தித்த பிரபலங்களில் நடிகை ரம்பாவும் ஒருவர் ஆவார். 80-ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகையான இவர் தன்னுடைய தொழிலதிபர் கணவருடன் கனடாவில் செட்டில் ஆகியுள்ளார். அங்குள்ள பள்ளியிலேயே அவருடைய குழைந்தகள் படித்துக் கொண்டிருக்கின்றார். சம்பவ தினத்தன்று மகனையும், மகளையும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் ரம்பாவும் அவரது மகனும் சிறு சிறு காயத்துடன் தப்பிவிட, மகளுக்கு மட்டும் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. டெஸ்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே அவர்கள் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகின்றது. டிரைவரே இல்லாமல் சாலையில் இயங்கும் திறன் கொண்டதே டெஸ்லா நிறுவனத்தின் கார் மாடல்கள். இருப்பினும், நடிகை ரம்பா விஷயத்தில் இந்த கார் பெரும் பிழையை செய்துவிட்டது என்றே கூறலாம். இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்டதாக ரம்பா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
ரிஷப் பந்த் விபத்து சம்பவம்:
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ரிஷப் பந்த்-ம் ஒருவர் ஆவார். இவர் சமீபத்தில் தன்னுடைய தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) அதிகாலையில் எதிர்பாராத விதமாக அவர் பயணித்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது. சாலையோர டிவைடரில் மோதி கடும் விபத்துக்கு அவருடைய சொகுசு கார் ஆளானது.
இந்த விபத்தில் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து நாசமாகியது. நொடிப் பொழுதில் சுதாரித்துக் கொண்ட ரிஷப் பந்த் காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினார். இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பந்த், தற்போது தீவிர பிரிவில் இருந்து வழக்கமான சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றார். நடப்பாண்டில் நடைபெற்ற மிக முக்கியமான விபத்துகளில் ரிஷப் பந்தின் விபத்தும் ஒன்றாக மாறியுள்ளது.
டெல்லி - டெஹ்ராடூன் நெடுஞ்சாலையிலேயே இந்த கொடூர விபத்து அரங்கேறி உள்ளது. இந்த விபத்துகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் கார் அதிக வேகத்தில் வந்து விபத்தில் சிக்குவதை நம்மால் காண முடிகின்றது. அதி வேகம் கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் பலர் அதை கடைபிடிக்காத சூழலே தென்படுகின்றது. இந்த நிலையிலேயே ரிஷப்பின் விபத்து சம்பவம் அரங்கேறி உள்ளது.
சைரஸ் மிஸ்த்ரி விபத்து சம்பவம்:
நாட்டையே உலுக்கிய விபத்து என சம்பவம் என சைரஸ் மிஸ்த்ரியின் விபத்து சம்பவத்தை குறிப்பிடலாம். சைரஸ் மிஸ்த்ரி முன்னாள் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக பணியாற்றியவர் ஆவார். இவரே சமீபத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு வீடு திரும்பும்போதே விபத்தில் சிக்கி பலியாகினார். சைரஸ் மிஸ்த்ரி பயணித்தது விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி ரக காராகும். இதில் சொகுசு வசதிகள் மட்டுமல்ல பாதுகாப்பு அம்சங்களும் ஏராளாம்.
இருப்பினும் விபத்தினால் அவர் கடுமையான காயங்களுக்கு ஆளாக சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதற்கு அவர்கள் பயணித்த கார் அதிக வேகத்தில் இயக்கப்பட்டதே முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமில்லைங்க, காருக்குள் இருந்த அவர் சீட் பெல்ட் அணியவில்லை. இதன் காரணத்தினாலேயே விபத்தில் கடுமையான காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த போதும் அவர் காயங்களில் இருந்து தப்பிக்கவில்லை. இந்த காரணத்தினாலேயே நாடு முழுவதும் பின்னிருக்கையாளர்களும் சீட் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற விதி மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இன்னும் பல புதிய விதிகள் இவரின் விபத்திற்கு பின் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, சீட் பெல்ட் கட்டாயம், சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் மற்றும் சீட் பெல்ட் அலாரத்தை கட் செய்யும் கருவிக்கு தடை போன்ற பல்வேறு விதிகள் உடனுக்கு உடன் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. மேலும், எந்த மாதிரியான வாகனமாக இருந்தாலும் அதிக வேகம் உயிரை குடிக்கும் என்பதையே இந்த விபத்து நிகழ்வு அனைவருக்கும் பாடம் புகட்டியது.
மாலாய்கா அரோரா விபத்து சம்பவம்:
புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகைகளில் மலாய்கா அரோராவும் ஒருவர். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் சாலை விபத்தில் சிக்கி மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார். புனேவில் இருந்து மும்பை செல்லும் வழியிலேயே இவரது சொகுசு கார் விபத்தில் சிக்கியது. அவர் பயணித்த ரேஞ்ஜ் ரோவர் காரும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகியது. சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகை, விரைவிலேயே வீடு திரும்பினார். இவரின் இந்த விபத்து சம்பவமும் நாடு முழுவதும் பெரும் பேசும் பொருளாக மாறியது. இவரை போல் இன்னும் பல பிரபலங்கள் நடப்பாண்டில் விபத்தில் சிக்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








