பணம் நிறைய வச்சிருந்தாலும் கார் வாங்கும் போது இதெல்லாம் இல்லாமயே வாங்குங்க! வாங்கி ஒரு புரோஜனம் கூட கிடையாது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் இந்திய கண்டிசன்களுக்கு தேவையில்லாத சில அம்சங்கள் கார்களில் வழங்கப்படுகிறது. இது குறித்த விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஒரு காலத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் அது நல்ல மைலேஜை தர வேண்டும் என மக்கள் நினைத்தனர். இதனால் இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்கள் தான் அதிகமாக விற்பனையானது. அன்று மக்கள் மத்தியில் பெட்ரோலுக்காக அதிகம் செலவு செய்ய முடியாத பொருளாதார சூழ்நிலைதான் இருந்தது. ஆனால் இன்று நிலைமையே வேறு காரில் மைலேஜ் பெரிய அளவில் பார்க்கப்படுவதில்லை.

இன்று மக்கள் அதிகம் தொழிற்நுட்ப அம்சங்கள் கொண்ட கார்களையே அதிகம் விரும்பத் துவங்கிவிட்டனர். கார் தயாரிப்பார்களும் தங்கள் கார்களில் என்னென்ன அம்சங்களை எல்லாம் புதிதாகக் கொண்டு வரலாம் என யோசித்து மக்களைக் கவர புதுப்புது அம்சங்களை எல்லாம் கார்களில் அறிமுகப்படுத்தி எப்படியாவது விற்பனையை அதிகரிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் கார்களில் ஏகப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஏன் மாருதிசுஸூகி நிறுவனத்தின் கார்களில் பெரிய அளவில் தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அந்த நிறுவனமே தனது பிரெஸ்ஸா மற்றும் பலேனோ கார்களில் ஏகப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படியாகப் பல அம்சங்களை கார்களில் அறிமுகப்படுத்துவதால் அதன் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. இதன் எதிரொலியாக கார்களின் விலையும் அதிகமாகிறது. இதனால் கார்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கார் வாங்கும் பலர் தேவையில்லாத அம்சங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி கஷ்டப்படுகிறார்கள். இதனால் இந்த பதிவில் நாம் கார்களில் கொடுக்கப்படும் தேவையில்லாத அம்சங்களின் பட்டியலைக் காணப்போகிறோம். நீங்கள் வாங்கும் காரில் இந்த அம்சங்கள் இருந்து அதற்காக காரின் விலை அதிகமானால் எந்த யோசனையும் இல்லாமல் அந்த அம்சங்களைத் தவிர்க்கவே இதை உங்களுக்காக வழங்குகிறோம்.

சன் ரூஃப்
தற்போது அறிமுகமாகும் பல கார்களில் சன்ரூஃப் என்ற ஒரு அம்சம் முக்கியமான இடத்தை பெறுகிறது. மக்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். இதனால் பிரபலமான பல கார்கள் கூட அப்டேட் செய்யப்படும் போது இந்த சன்ரூஃபை கொடுக்கின்றனர். ஆனால் இந்திய கண்டிஷன்களுக்கு சன் ரூஃப் சரியே இல்லை. வெயில் குறைவாக உள்ள நாடுகளில் சன்ரூப் நேச்சுரலாக இருக்கும்.

ஆனால் இந்தியா வெயில் அதிகம் உள்ள நாடு சன்ரூஃபை திறந்தால் உள்ள வெயில் அடிக்கும். அதே போல இந்தியா அதிகமாகக் காற்று மாசு நிறந்தநாடு அதனால் இந்த சன் ரூஃப் வழியாக மாசு காற்றும் காருக்குள் வரும் இந்த அம்சத்திற்காக காரின் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. இதனால் இந்த அம்சம் கொண்ட காரின் விலையும் அதிகமாகிறது. இந்தியர்கள் தாராளமாக இந்த அம்சத்தைத் தவிர்க்கலாம். இது பெரியதாகப் பலன்களைத் தராது.

ADAS
எதிர்காலத்தில் ஆட்டோமொபைல்கள் எல்லாம் தானியங்கியாகச் செயல்படும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. உலகின் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டது. இந்த ஆட்டோமெட்டிக் டிரைவிங்கில் ஒரு அம்சமாக ADAS தொழிற்நுட்பம் இருக்கிறது. இது இந்தியாவில் எம்ஜி, மஹிந்திரா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களில் கார்களில் காண முடிகிறது.

ஆனால் இந்த ADAS தொழிற்நுட்பம் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத ஒன்று அதில் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. இன்னும் இந்த தொழிற்நுட்பத்தை மேம்படுத்த ஆய்வுகள் நடந்த கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் உள்ள ரோடுகளின் கண்டிஷன்கள் மற்றும் டிராஃபிக்களை கணக்கிட்டுப் பார்க்கும் போது இந்த ADAS தொழிற்நுட்பம் வாகனம் ஓட்டும் போது எரிச்சலைத் தான் தரும்.

ADAS என்பது ஓட்டுநருக்கு ஒரு அசிஸ்டென்டாகவே இருக்கும். ஆனால் எந்த காலத்திலும் ஒட்டுநர் இல்லாமல் காரை இயங்க வைக்காது, ஆட்டோமெட்டிக் கார்களே இன்னும் சில ஆண்டுகளில் மேம்பட்டுவிடும் நிலையில் தற்போது இந்த ADAS தொழிற்நுட்பம் கொண்ட கார்களை வாங்குவது என்பது வீண் செலவு தான் கார் வாங்கும் போது இதில் பணம் அதிகம் வீணாகிறது.

அலெக்ஸா/ கூகுள் ஹோம் கனெக்ட்டிவிட்டி
இன்று கார்களில் கனெக்ட்டிவிட்டி தொழிற்நுட்பம் முக்கிய அம்சமாக இருக்கிறது. பல கார்கள் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் தான் வருகிறது. இது பல வகையில் பலன் தரக்கூடியதுதான். இப்பொழுது நீங்கள் வீட்டிலிருந்து காரில் வெளியே கிளம்பப் போகிறீர்கள். ஆனால் காருக்குள் சென்றதும் ஏசி இருக்காது. அதனால் நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே காரில் ஏசியை இந்த தொழிற்நுட்பத்தால் ஆன் செய்ய முடியும்.

இந்த தொழிற்நுட்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இதற்காக நாம் செலவிடுவது அதிகம். இந்த தொழிற்நுட்பம் வாழ்வை எளிதாக்கும் என்பது உண்மை தான். ஆனால் அதற்காக எவ்வளவு செலவு செய்ய முடியும்? இந்த தொழிற்நுட்பம் கட்டாயம் வேண்டும் என நினைப்பவர்கள் இதை வைத்துக்கொள்ளலாம். இல்லை காருக்கான பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த தொழிற்நுட்பத்தை தவிர்க்கலாம்.

ஏர் ஃப்யூரிபையர்
இந்தியாவில் பெரும் நகரங்கள் எல்லாம் அதிகம் காற்று மாசு நிறைந்த அலுவலகங்கள் தான். அதனால் காரில் செல்லும் போது நமது ஆரோக்கியத்திற்கு இந்த ஏர் ஃப்யூரிபையர் மிகவும் அவசியமான ஒன்று தான். இன்று பெரும்பாலான கார்களில் டாப் மாடலில் இந்த ஏர்ஃப்யூரிபையர் இன்பில்டாக வருகிறது. இந்த ஒரு வசதிக்காக காரின் டாப் வேரியன்டை வாங்க வேண்டிய தேவையில்லை

லோ அல்லது மிட் வேரியன்டை வாங்கி வெளி மார்கெட்டில் நல்ல தரமான ஏர் ஃப்யூரிபையர்களை வாங்கி பயன்படுத்தினால் அதன் விலை குறைவாகத் தான் இருக்கும். இன்பில்டு ஏர்ஃப்யூரிபையருக்காக அதிக விலையைக் கொடுத்து டாப் மாடலை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்
இன்று கார்களில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆப்ஷனாக வந்துவிட்டது. இந்த தொழிற்நுட்பம் என்ன செய்யும் என்றால் வெளியில் உள்ள வெப்ப நிலையில் காருக்குள் உள்ள வெப்ப நிலையை அறிந்து ஏசியின் அளவை தானாகவே கூட்டிக் குறைத்துக்கொள்ளும். நீங்கள் ஏசியை ஆன் செய்தால் மட்டும் போதுமானது தான்.

ஆனால் உண்மையில் காருக்குள் இருக்கும்போது ஏசியை கூட்டிக் குறைப்பது எல்லாம் ஒரு சிரமமான வேலையா என்ன? இதை ஒரு சில நொடிகளில் செய்து விடலாம். இதற்காகத் தானியங்கி தொழிற்நுட்பத்தை உருவாக்கி அதற்கு அதிகம் செலவு செய்வது முற்றிலும் வீண் தான். இந்த விபரம் எல்லாம் காருக்கான பட்ஜெட்டை குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் அட்வைஸ்தான். ஆனால் இந்த தொழிற்நுட்பத்திற்கான செயல்பாடுகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப கார்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்


Click it and Unblock the Notifications








