2022ல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த சூப்பர் கார்களின் லிஸ்ட்.. நம்மோட ஃபேவரிட் கார்கள் நிறைய அறிமுகமாயிருக்கு!
பட்ஜெட் கார்களை போலவே இந்தியாவில் நடப்பு 2022 ஆம் ஆண்டில் விலையுயர்ந்த சொகுசு கார்களும் ஏராளமாக அறிமுகமாகி உள்ளன. இதேபோல், சூப்பர் கார்களும் அதிக எண்ணிக்கையில் அறிமுகமாகி இருக்கின்றன. இவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த மிக சிறந்த 10 கார்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வெளியிட்டுள்ளோம். வாருங்கள் இவை குறித்து விரிவாக பார்க்க போகலாம்.
போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (911 GT3 RS) மற்றும் 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் (718 Cayman GT4 RS)
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே இந்தியாவில் நடப்பு 2022 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக இரு கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கியது. அவையே போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் மற்றும் போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் ஆகும். இந்த இரு கார் மாடல்களும் சொகுசு வசதிகள் நிறைந்த சூப்பர் காராகும். குறிப்பாக, சாலையில் இயக்க லீகலான கார் மாடல்களாக இவை இருக்கின்றன. ஆமாங்க, ஸ்போர்ட்ஸ் கார் திறன் கொண்ட காரை சாலையில் இயக்க எந்த தடையும் இல்லை.

போர்ஷே நிறுவனம் ஜிடி3 ஆர்எஸ் மாடலில் மணிக்கு 296 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 386 கிலோவாட் / 525 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலை ரூ. 3.24 கோடிக்கும் அதிகமான விலையில் போர்ஷே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
911 ஜிடி3 ஆர்எஸ் கார் மாடலைக் காட்டிலும் சற்று விலை குறைவான சூப்பர் காராக 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் இருக்கின்றது. ரூ. 2.54 கோடி என்ற உச்சபட்ச விலையிலேயே இந்த கார் மாடல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 4.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டாரே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 493 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. வழக்கமான ஜிடி4 வேரியண்டைக் காட்டிலும் இது கூடுதல் திறன் வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 315 கிமீ ஆகும்.
லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Huracan Tecnica), அவன்டேடார் அல்டிமே (Aventador Ultimae) மற்றும் உருஸ் பெர்ஃபார்மண்டே (Urus Performante):
லம்போர்கினி நிறுவனம் சந்தையை சிறப்பிக்கும் விதமாக நடப்பு 2022 ஆம் ஆண்டில் மூன்று சிறப்பான சூப்பர் கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஹூராகேன் டெக்னிகா இவற்றில் மிக விலை உயர்ந்த கார் மாடலாக இருக்கின்றது. இதன் விலை ரூ. 4.04 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூராகேன் டெக்னிகா ஓர் மிட் எஞ்ஜின் சூப்பர் கார் ஆகும். 640 பிஎஸ் மற்றும் 565 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதாக இக்காரில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் இருக்கின்றது.
5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ ஆகும். இது வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டதும்கூட. இதேபோல் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவே அவன்டேடார் அல்டிமே இருக்கின்றது. நடப்பாண்டு ஜூலை மாதத்திலேயே இந்த சூப்பர் காரை லம்போர்கினி நிறுவனம் இந்தியா கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரில் அதிக பவர்ஃபுல்லான மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.5 லிட்டர் வி12 மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 780 பிஎஸ் பவரை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 355 கிமீ ஆகும். இருப்பினும், இந்த சூப்பர் கார் சாலையில் இயக்க உகந்த காராக உள்ளது. இது வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. இந்த காரை போலவே மிக சிறந்த திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டதாக இதே ஆண்டில் லம்போர்கினி களமிறக்கிய உருஸ் பெர்ஃபார்மண்டே இருக்கின்றது.
இந்திய சொகுசு வாகன பிரியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி ரக காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலின் சூப்பர் வெர்சனாக உருஸ் பெர்ஃபார்மண்டே இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 4.22 கோடிக்கு விற்கப்படுகின்றது. 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 666 எச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 306 கிமீ ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேக திறன் காரணமாக இந்தியாவின் அதி வேக எஸ்யூவி காராக இது காட்சியளிக்கின்றது.
ஃபெர்ராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB):
நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்திலேயே ஃபெர்ராரிர நிறுவனம் தனது 296 ஜிடிபி சொகுசு காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமாகிய மிக சிறந்த சூப்பர் கார்களில் இதுவும் ஒன்றாகும். எனவேதான் நம்முடைய இந்த சூப்பர் கார்களின் லிஸ்டில் ஃபெர்ராரி 296 ஜிடிபி இடம் பிடித்துள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ வேகம் ஆகும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக 3.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 654 எச்பி பவரையும் வெளியேற்றும். இத்துடன், 166 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய ஓர் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் 296 ஜிடிபி காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து 830 எச்பி திறனை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் 707 (Aston Martin DBX 707):
அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் அதன் டிபிஎக்ஸ் 707 சொகுசு எஸ்யூவி ரக காரை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 4.63 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது லம்போர்கினி உருஸ் கார் மாடலைக் காட்டிலும் அதிக வேகத்தில் எஸ்யூவி ரக காராகும். ட்வின் டர்போ வி8 ட்யூன்ட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 707 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலே பார்த்த இந்த கார் மாடல்கள் தவிர இன்னும் பல சூப்பர் மற்றும் அதி திறனை வெளியேற்றக் கூடிய சொகுசு கார்கள் நடப்பு 2022 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எக்ஸ்எம் மற்றும் எம் 340ஐ கார் மாடல்களையும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் இக்யூஎஸ் ஏஎம்ஜி எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது.


Click it and Unblock the Notifications








