இந்த கார்களுக்கு எல்லாம் ஒரே இன்ஜின் தானா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
இந்தியாவில் விற்பனையாகும் வேறு வேறு கார்களுக்கு ஒரே இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த கார்களுக்கு எந்தெந்த இன்ஜின்கள் ஒரே மாதிரியாகப் பொருத்தப்படுகின்றன? வாருங்கள் காணலாம்.

வாகன உற்பத்தியில் முக்கியமானது இன்ஜின். இது மிக நுட்பமான இன்ஜினியரிங்கை கொண்டது சிறிய தவறு நடந்தாலும் ஒட்டு மொத்த இன்ஜினே கெட்டுப் போய்விடும். அதனால் ஆட்டோமொபைல் இன்ஜின் தயாரிப்பிற்கு ஏராளமாகச் செலவு செய்யும் ஒரு வாகனத்திற்கு ஒரு மாடல் இன்ஜின் தயாரிக்க வேண்டும் என்றால் கார்களின் விலையும் எகிறும். அதனால் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு இன்ஜினை கொண்டு பல வாகனங்களைத் தயார் செய்யும்.

இது ஒரே நிறுவனத்தின் வாகனமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சில நேரம் செலவுகளைப் பிரித்துக்கொள்ள இரண்டு போட்டி நிறுவனங்கள் கூட ஒன்று சேர்ந்து ஒரே இன்ஜினை உருவாக்கி அதை இருவரும் தங்கள் கார்களில் பொருத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்வார்கள். சில நிறுவனங்கள் மற்ற நிறுவனங்கள் தயாரித்த இன்ஜினை டிசனை விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். இப்படியாக இந்தியாவில் விற்பனையாகும் வேறு வேறு வாகனங்களுக்கு ஒரே இன்ஜின் பொருத்தப்பட்ட உதாரணங்கள் நிறைய இருக்கிறது அதைத் தான் இங்குக் காணப்போகிறோம்.

டாடா சஃபாரி- என்ஜி ஹெக்டர் பிளஸ்
டாடா நிறுவனத்தின் சஃபாரி காரும், எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் காருக்கும் ஒரே இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இரண்டு கார்களிலும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை தயாரித்தது பியட் நிறுவனம்.

இந்த இன்ஜின் 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. டாடா நிறுவனம் இந்த இன்ஜினில் சிறிய மாற்றம் செய்து சஃபாரி காரில் பயன்படுத்துகிறது. இதே இன்ஜினில் 1.3 லிட்டர் வெர்ஷன் இருக்கிறது. இதை பியட், மாருதி சுஸூகி, சாவர்லெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேறு கார்களில் பயன்படுத்துகின்றன.

ஃபோக்ஸ்வாகன் விர்டூஸ் - ஸ்கோடா ஸ்லாவியா
ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா ஆகியன வெவ்வேறு நிறுவனங்கள் தான் ஆனால் கார் தயாரிப்பில் இந்த இரண்டு நிறுவனங்களில் கார்களுக்கு ஏராளமான ஒற்றுமைகள் இருக்கும் இந்நிலையில் ஃபோக்ஸ்வாகனின் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

அதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. இரண்டு கார்களிலும் இதே இன்ஜின் தான் இருக்கிறது. இதில் 1.0 லிட்டர் இன்ஜின் 115 பிஎச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் இன்ஜின் 147 பிஎச்பி பவர் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

கியா கேரன்ஸ்- ஹூண்டாய் அல்காஸர்
இந்த பட்டியலில் அடுத்த ஜோடி கியா கேரன்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகிய கார்கள்தான். இந்த இரண்டு கார்களும் சிஆர்டிஐ இன்ஜினை பயன்படுத்துகிறது.

1.5 லிட்டர் சிஆர்டிஐ இன்ஜினை இரண்டு கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்

பென்ஸ் ஏ கிளாஸ் - நிஸான் கிக்ஸ்
இந்த தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும் பென்ஸ் காருக்கும் நிஸான் காருக்கும் ஒரே இன்ஜினா என்று இந்த இன்ஜினின் கோட் பெயர் HR13DDT. இந்த இன்ஜினை பென்ஸ்- ரெனால்ட் - நிஸான் - மிட்சுபிஸி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது. இந்த இன்ஜின் நிஸான் கிக்ஸ் காரில் 158 பிஎச்பி பவர் மற்றும் 254 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே மெர்சிடீஸ் ஏ கிளாஸ் காரில் உள்ள இன்ஜின் 163 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் அளவிற்கு லேசாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டிரைபர்- ரெனால்ட் க்விட்
ஒரே நிறுவத்தைச் சேர்ந்தது தான் இரண்டு கார்கள் என்றாலும் ஒன்று அதிக விலை கொண்ட எம்பிவி கார். மற்றொன்று குறைந்த விலையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் இரண்டிற்கும் ஒரே இன்ஜினா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உண்மை அதுதான். இரண்டு கார்களும் 1.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது.

ஆனால் இரண்டும் வேறு வேறு விதமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. க்விட் காரில் இருக்கும் இன்ஜின் 67 எச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுவே டிரைபர் இன்ஜினில் இது 71 எச்பி பவரையும் 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இது போன்று உங்களுக்கு சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








