இனி கார் வாங்க காசு மட்டும் போதாது பொறுமையும் வேணும், காருக்காக காத்திருக்கும் 6.5 லட்சம் மக்கள்
இந்தியா முழுவதும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கார்களை டெலிவரி செய்யும் காத்திருப்பு பட்டியலை நீட்டிக்கொண்டே செல்கிறது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த நிலை அனைத்து நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கார் வாங்க வேண்டும் என்றால் கையில் பணம் இருந்தால் போதும் நீங்கள் நேரடியாக கார் ஷோரூமிற்கு சென்று உங்களுக்குப் பிடித்த காரை தேர்வு செய்து, அந்த காருக்கான பணத்தைக் கட்டி விட்டால் வீட்டிற்கு வரும் போது காரில் வந்துவிடலாம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. இன்று உங்களுக்குப் பிடித்த காரை வாங்க வேண்டும் என்றால் அதற்கு சில நாட்கள் முதல் வாரங்கள், மாதங்கள் ஏன் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இன்று நீங்கள் கார் ஷோரூமிற்கு சென்று உங்களுக்குப் பிடித்த காரை பிடித்த கலரில் பிடித்த வேரியன்ட்டில் புக் செய்தால் நீங்கள் புக் செய்த காருக்காக நீங்கள் இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள் குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு தான் உங்களுக்கு கார்கள் கிடைக்கும். அந்த அளவிற்கு இன்று கார்களுக்கு இந்தியாவில் டிமாண்ட் உருவாகிவிட்டது.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் காருக்காக பணம் கட்டிவிட்டு காரை டெலிவரி எடுப்பதற்காக ஒரு சிலர் இல்லை, மொத்தம் 6.5 லட்சம் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவிற்கு கார்களை தயாரித்துக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக கார்களுக்கான தேவை அதிகமாகிவிட்ட நிலையில் தயாரிப்புகள் அதிகமாகவில்லை.

சர்வதேச அளவில் மைக்ரோ சிப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மைக்ரோ சிப் இந்த இரு நாடுகளிலும் பிரதானமாகத் தயாராவது இல்லை என்றாலும், மைக்ரோ சிப் தயாரிக்கத் தேவைப்படும் நியான் கேஸ் உக்ரைன் நாட்டில் தான் அதிகம் உற்பத்தியாகி வந்தது.

தற்போது நியான் கேஸ் தட்டுப்பாட்டால் மைக்ரோசிப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவும் கார் தயாரிப்ப மந்த நிலைக்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த கார்களை புக் செய்து காத்திருக்கும் பட்டியலில் பாரம்பரிய மாருதி சுஸூகி முதல் சமீபத்தில் இந்தியாவிற்குள் வந்த கியா நிறுவனம் வரை காத்திருப்பு என்பது எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. இதில் மாருதி சுஸூகி நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது.

இது குறித்து இந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவட்சவா என்பவர் கூறும் போது : "இந்தியா முழுவதும் 6.5 லட்சம் கார்கள் புக் பண்ணப்பட்டு டெலிவரிக்காக காத்திருக்கிறது. அதில் மாருதி சுஸூகி நிறுவனத்திடம் மட்டும் 3.4 லட்சம் கார்கள் இருக்கிறது. இந்த காத்திருப்பு காலத்தைக் குறைக்க ஒரே வழி தயாரிப்பை அதிகரிப்பது தான் " எனக் கூறினார்.

மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களிடம் சேர்த்து மொத்தம் 3 லட்சம் கார்கள் புக்கிங் செய்யப்பட்டு டெலிவரிக்காக காத்திருக்கிறது. கார்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 கார்கள் இந்தியாவிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்ட காராக இருக்கிறது. இந்த காருக்கான காத்திருப்ப காலம் 2 ஆண்டுகள் வரை இருக்கிறது.

இதே போல டாடா, மோட்டார் மற்றும் கியா இந்தியா ஆகிய நிறுவனங்களும் கார்களுக்கான காத்திருப்பு பட்டியலை நீட்டிக்கொண்டே செல்கின்றனர். டாடா நிறுவன கார்களை புக் செய்தால் 1 முதல் 3 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. நீங்கள் தேர்வு செய்யும் மாடல், வேரியன்ட், மற்றும் நிறத்தைப் பொருத்து இது மாறுபடும். எலெக்டரிக் வாகனத்தைப் பொருத்தவரை 80 சதவீதமான மார்கெட் ஷேரை இந்நிறுவனம் தான் வைத்திருக்கிறது. இந்த கார்களுக்கு 6 மாதம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கும் காத்திருப்பு காலம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு 2 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். சிட்டி ஹைபிரிட் காருக்கு அதிக பட்சமாக 9 மாதம் காத்திருக்க வேண்டும்.

இப்படியாக அனைத்து நிறுவனங்களும் காத்திருப்பு காலம் அதிகரிக்க 2 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் சிப் தட்டுப்பாடு. இரண்டாவது முக்கியமான காரணம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார் தயாரிப்பை வேகப்படுத்த இன்னும் அதிக முதலீடுகளைச் செய்ய விரும்பவில்லை.

இதனால் கார்களுக்கான தேவை குறைந்தால் தேவையில்லாத செலவு அதிகமாகும் என்பதைக் கணக்கில் கொண்டு இருக்கும் திறனைக் கொண்டே முடிந்தளவிற்கு கார்களை தயாரித்து வருகிறது. இதற்கு கார்களின் விலையில் இருக்கும் போட்டியால் நிறுவனங்கள் குறைந்த லாபத்தையே ஈட்டுகின்றன. இதுவும் முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications








