புது லிஸ்ட் வெளியானது... இவைதான் மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்கள்... டாடா, மஹிந்திரா ஆதிக்கம்!
மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடப்பு 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைக்கு உட்படுத்திய 'மேட் இன் இந்தியா' கார்களின் பாதுகாப்பு தரவரிசை வெளியாகியுள்ளது. இது தற்போது 'அப்டேட்' ஆகியுள்ள பட்டியல் ஆகும். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் டாப்-10 பாதுகாப்பான கார்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

பொதுவாக குளோபல் என்சிஏபி அமைப்பு ஒவ்வொரு காருக்கும், பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 5க்கு இவ்வளவு ஸ்டார்கள் என ரேட்டிங் வழங்கும். இதுதவிர தனியாக புள்ளிகளும் வழங்கப்படும். இதன்படி பெரியவர்களுக்கான பாதுகாப்பை பொறுத்தவரை, 17க்கு இவ்வளவு புள்ளிகள் என வழங்கப்படும். குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கும் கிட்டத்தட்ட இதே முறைதான்.

பெரியவர்களுக்கான பாதுகாப்பை போல், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கும், 5க்கு இவ்வளவு என ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். ஆனால் புள்ளிகளை பொறுத்தவரை, 49க்கு இவ்வளவு என கொடுக்கப்படும். இந்த இரண்டிலும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளை ஸ்கோர் செய்த டாப்-10 கார்களை இங்கே வழங்கியுள்ளோம் என்பதை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறோம்.

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 முதலிடத்தை பிடித்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது. புள்ளிகளை பொறுத்தவரையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17க்கு 16.03 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 41.66 புள்ளிகளையும் இந்த கார் ஸ்கோர் செய்துள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 66க்கு 57.69 புள்ளிகளை ஸ்கோர் செய்து இந்த பட்டியலில் எக்ஸ்யூவி700 முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாடா பன்ச் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் டாடா பன்ச் பெற்றுள்ளது.

டாடா பன்ச் கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 57.34 (16.45+40.89) ஆகும். இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 53.86 (16.42+37.44) ஆகும். இந்த பட்டியலில் மஹிந்திரா தார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவுகளிலும் மஹிந்திரா தார் தலா 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்த புள்ளிகளின் எண்ணிக்கை 53.63 (12.52+41.11) ஆகும்.

இந்த பட்டியலில் நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவுகளிலும் தலா 4 ஸ்டார்களை இந்த கார் பெற்றுள்ளது. இந்த கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 50.30 (12.03+38.27) ஆகும். இந்த பட்டியலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் பெற்றுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 50.20 (13.52+36.68) ஆகும். இந்த பட்டியலில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருக்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவுகளிலும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தலா 4 ஸ்டார்களை ஸ்கோர் செய்துள்ளது. இந்த கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 49.24 (12.00+37.24) ஆகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ எட்டாவது இடத்தில் உள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் இது பெற்றுள்ளது.

டாடா டியாகோ கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 46.67 (12.52+34.15) ஆகும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் டாடா டிகோர் உள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் டாடா டிகோர் கார் தன்வசப்படுத்தியுள்ளது.

டாடா டிகோர் கார் ஸ்கோர் செய்த ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 46.67 (12.52+34.15) ஆகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் ஐ20 கார் பிடித்துள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவுகளிலும், இந்த கார் தலா 3 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார் ஸ்கோர் செய்துள்ள ஒட்டுமொத்த புள்ளிகளின் எண்ணிக்கை 45.73 (8.84+36.89) ஆகும்.

இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களும் இடம்பெறாதது உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இதுவரை ஒட்டுமொத்தமாக 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார்களை வாங்கியுள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா பன்ச் ஆகிய 3 கார்கள் டாப்-10 பட்டியலில் வந்துவிட்டன.

டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களுக்கும் டாப்-10 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இதற்கான காரணத்தை நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இது ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆகும். டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களும், 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியிருந்தாலும், ஒட்டுமொத்த புள்ளிகளில் அவை பின்தங்கி விட்டன.

டாடா அல்ட்ராஸ் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் வாங்கியுள்ளது. ஆனால் டாடா அல்ட்ராஸ் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்த புள்ளிகளின் எண்ணிக்கை 45.13 (16.13+29.00) மட்டுமே. எனவே டாடா அல்ட்ராஸ் காருக்கு இந்த பட்டியலில் 12வது இடமே கிடைத்துள்ளது.

அதே சமயம் டாடா நெக்ஸான் காருக்கு இந்த பட்டியலில் 14வது இடம்தான் கிடைத்துள்ளது. டாடா நெக்ஸான் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் கார் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்த புள்ளிகளின் எண்ணிக்கை 41.06 (16.06+25.00) ஆகும். எனவே டாடா நெக்ஸான் காருக்கு 14வது இடம்தான் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








