இந்தியாவில் போட்டியாளர்களை கதிகலங்க வைத்து கொண்டுள்ள மாருதி கார் வெளிநாட்டில் அறிமுகம்... எங்க தெரியுமா?
இந்தியாவில் போட்டியாளர்களை கதிகலங்க வைத்து கொண்டுள்ள மாருதி கார் வெளிநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் விலைகளை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடனும் இந்த இன்ஜின் கிடைக்கும். ஆனால் ஆல் வீல் டிரைவ் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். இதுதவிர 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும்.

எவ்வளவு வாடிக்கையாளர்கள் இந்த காரை எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்? என்பதை முன்பதிவு எண்ணிக்கை தெளிவாக காட்டுகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். விலை எவ்வளவு? என்பது இன்னும் தெரியாத நிலையிலேயே, இந்த காரை இவ்வளவு பேர் முன்பதிவு செய்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

இந்த சூழலில் மேட் இன் இந்தியா க்ராண்ட் விட்டாரா காரை மாருதி சுஸுகி நிறுவனம் தென் ஆப்ரிக்க சந்தையிலும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், தென் ஆப்ரிக்க சந்தையில் வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள அதே க்ராண்ட் விட்டாரா கார்தான் மாற்றங்கள் இன்றி தென் ஆப்ரிக்க சந்தையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் , ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிடும்.

அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் நடப்பு ஆகஸ்ட் மாத மத்தியிலேயே விற்பனைக்கு வருவதாக இருந்தது.

ஆனால் திடீரென அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதற்கான காரணம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை போலவே, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








