மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை விரைவில் அறிமுகம்... சலுகைகள் கிடைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு!
மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. பெட்ரோல், டீசலுக்காக வெளிநாடுகளை அதிகமாக சார்ந்து இருக்க கூடாது என்பதற்காகவும், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்பி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து விடுகிறது. கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தில், சர்வதேச நிகழ்வுகள் முக்கிய காரணிகளாக உள்ளன.

உதாரணத்திற்கு தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச நிகழ்வுகள் கச்சா எண்ணெய்யின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோன்ற பல்வேறு சர்வதேச நிகழ்வுகளாலும், கச்சா எண்ணெய்யின் விலை அவ்வப்போது உயர்வது வாடிக்கையாக உள்ளது. அத்துடன் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய, மாநில அரசுகளும் அதிகப்படியான வரிகளை விதித்து வருகின்றன.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விட்டால் பிரச்னையை சமாளிக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பது ஒரு மைனஸ். பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் இது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

எனவே மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த சூழலில், மத்திய பிரதேச மாநில அரசு வெகு விரைவில் தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேச மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை (Electric Vehicle (EV) Policy) கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும் மத்திய பிரதேச மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கு உள்ளாக, அதாவது இன்னும் 2 மாதத்திற்கு உள்ளாக, மத்திய பிரதேச மாநில அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் பலரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எலெக்ட்ரிக் வாகன கொள்கை தயாராகி விட்டது. தற்போது மாநில அரசு மற்றும் இதர பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்யும் கட்டத்தில் உள்ளது. முழுமையான இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட பிறகு, இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கை, மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றனர்.

இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் ஏற்கனவே தங்களது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வெளியிட்டுள்ளன. காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லி போன்ற மாநிலங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கைகளின் கீழ், எலெக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் உற்பத்திக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் விரைவில் அறிவிக்கப்படவுள்ள மத்திய பிரதேச மாநில எலெக்ட்ரிக் வாகன கொள்கையும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








