இது மஹிந்திரா பொலிரோ வாகனம்னு சொன்னா நிச்சயம் யாரும் நம்பமாட்டீங்க... ஆனா அதான் உண்மை!! நிஸான் ஜோங்காவாக...
நிஸான் ஜோங்கா வாகனத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்தவொரு பாதைக்கும் எடுத்து செல்லக்கூடிய ஆஃப்-ரோடு வாகனமான இது 1999 வரையில் சில வருடங்களாக இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இராணுவத்திற்கு முதன்முதலாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சில மாதங்களில் பொது வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஜோங்காவை நிஸான் அறிமுகப்படுத்தியது.

ஆனால் பொது விற்பனையில் நிஸான் ஜோங்கா பெரியதாக கவனத்தை பெறவில்லை. இதனால் மிக விரைவாகவே விற்பனை நிறுத்தி கொள்ளப்பட இந்திய இராணுவ பயன்பாட்டில் இருந்தும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தை தவிர்க்க ஆரம்பித்தனர். தற்போது இந்தியாவில் இந்த நிஸான் வாகனத்தை தேடினால் கிடைப்பது சற்று கடினமே.

இதனாலேயே ஒரு சிலர் தங்களது வாகனங்களை தாங்கள் விரும்பும் வாகனங்களாக மாடிஃபை செய்து பயன்படுத்துகின்றனர். இந்த வகையில் பழமையான நிஸான் ஜோங்கா வாகனமாக பஞ்சாப்பை சேர்ந்த மான் மாடிஃபையர்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மஹிந்திரா பொலிரோ வாகனம் ஒன்றினை மாடிஃபை செய்துள்ளது. இது தொடர்பாக ஒம்கர் ஷிண்டே என்பவர் வெளியிட்டுள்ள படங்கள் தான் இவை ஆகும்.

Image Courtesy: Omkar Shinde & Maan Modifiers
கஸ்டமைசேஷன் பணிகள் மிக அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிமையாளருக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு இந்த மஹிந்திரா பொலிரோ கார் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இறுதியில் நிஸான் ஜோங்காவின் தோற்றத்தை இந்த பொலிரோ காரில் பெற்றுள்ளனரா என்றால், பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மாடிஃபை வாகனத்திற்கு ஜோங்காவின் லோகோ வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சதுர வடிவிலான க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், இரட்டை கொக்கிகள் மற்றும் ஆற்றல்மிக்க இழுக்கும் கயிறு உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பக்க பொனெட் முக்கோண வடிவில் இருக்க, முன் கண்ணாடிகள் இரு துண்டுகளாக செவ்வக வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, இதன் தடிமனான பம்பரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் தனது பாதையில் உள்ள எது ஒன்றின் மோதலையும் தாங்கக்கூடியதாக இது உள்ளது. ஆனால் உண்மையில், தற்போதைய பாதசாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் இத்தகைய பருத்த பம்பரை பொருத்துவது சட்ட விரோதமானதாக பார்க்கப்படுகிறது. இவை போதாதென, வாகனத்தின் கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு பெரிய அளவிலான ஆஃப்-ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கேற்ப பக்கவாட்டிலும் ஃபெண்டர்கள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் அளவில் பெரியதாக வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில், வாகனத்தின் மேற்கூரை அலமாரியையும், பயணிகளுக்கான படிக்கட்டும் முழுவதுமாக தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது. மஹிந்திரா பொலிரோவின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்க வழங்கப்படும் பகுதி ஆனது ஆஃப்-ரோடு வாகனத்திற்கு ஏற்ப சிறியதாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இது மூடப்பட்ட பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின் மேல் மூடிக்கு மீதாக மற்றொரு அலமாரி கொடுத்து, அதன்மீது உதிரி சக்கரத்தினை பொருத்தியுள்ளனர். எந்தவொரு பாதைக்கும் எடுத்துச்செல்ல வேண்டி, வழக்கமான பொலிரோவின் க்ரவுண்ட் க்ளியரென்ஸை காட்டிலும் இந்த கஸ்டம் ஜோங்கா வாகனத்திற்கு அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸ் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தரையில் இருந்து வாகனத்தின் அடிப்பகுதி சற்று உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அளவில் பெரிய சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், வாகனத்தின் சஸ்பென்ஷன் அமைப்புகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கலாம். பொலிரோ வாகனத்தினை இவ்வாறு நிஸான் ஜோங்காவை போல் மாடிஃபை செய்ய ஒரு குழுவே தேவைப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்த மாடிஃபிகேஷன்களுக்கு ரூ.11 லட்சம் வரையில் செலவிட்டுள்ளனர். இவ்வளவு அதிகப்படியான செலவில் மஹிந்திரா பொலிரோவை நிஸான் ஜோங்கா தோற்றத்திற்கு கொண்டுவர இவர்களுக்கு 4 மாதங்கள் வரையில் தேவைப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை ஜோங்காவில் எம்ஹாவ்க் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 3,600 ஆர்பிஎம்-இல் 75 எச்பி மற்றும் 1,600- 2,200 ஆர்பிஎம்-இல் 210 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. அதுவே உண்மையான ஜோங்கா ஆஃப்-ரோடு வாகனத்தில் 3956சிசி, இன்-லைன், 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை நிஸான் நிறுவனம் வழங்கியது. 3-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட்ட இது அதிகப்பட்சமாக 110 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வாகனத்திற்கு வழங்கக்கூடியதாக இருந்தது.


Click it and Unblock the Notifications








