பிரம்மாண்டமான வளர்ச்சி... விற்பனையில் பின்னி பெடலெடுக்கும் மஹிந்திரா பொலிரோ கார்... கெத்து காட்டுது!
மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்களில் பொலிரோ (Mahindra Bolero) மிகவும் பிரபலமானது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில், 11,045 பொலிரோ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 4,843 பொலிரோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இதன் மூலம் மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 128.06 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. வருடாந்திர ஒப்பீட்டை போல், மாதாந்திர ரீதியில் ஒப்பிட்டாலும் கூட மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 3,506 பொலிரோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 11,045 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர ரீதியில் பார்த்தால், மஹிந்திரா பொலிரோ கார் விற்பனையில் 215.03 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இவை இரண்டுமே மஹிந்திரா பொலிரோ கார் பதிவு செய்துள்ள மிகப்பெரிய வளர்ச்சி என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை எண்ணிக்கையில், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) என இரண்டு கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா பொலிரோ நியோ காரில், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ காரிலும், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இன்ஜின் குறைவான பவர் அவுட்புட்டை வழங்கும் வகையில் 'ட்யூனிங்' செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஎஸ் பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். மஹிந்திரா பொலிரோ நியோ காரை போன்று, மஹிந்திரா பொலிரோ காரிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதன் மூலமும் இன்ஜின் சக்தியானது, காரின் பின் சக்கரங்களுக்குதான் அனுப்பப்படுகிறது. மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய இரண்டுமே 7 சீட்டர் கார்கள்தான். இவற்றின் நீளம் 4 மீட்டர்களுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் பொலிரோ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக மஹிந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருக்கிறது.

இதில், 'இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022' விருதை வென்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. அதேபோல் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கும் முன்பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. தனது கார்களுக்கு இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் மஹிந்திரா நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையானது, மஹிந்திரா நிறுவனத்தை மட்டுமல்லாது, உலகின் பல்வேறு கார் நிறுவனங்களையும் பாதித்துள்ளன. தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய 2 கார்களுக்குமே 1 வருடத்திற்கும் மேல் காத்திருப்பு காலம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையை சமாளித்து, தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய இரண்டு கார்களையும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மஹிந்திரா நிறுவனம் எடுத்து வருகிறது. அத்துடன் ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








