ஏற்கனவே டப்பா டான்ஸ் ஆடுது... இதுல இது வேறையா! புது கார் வாங்குற எண்ணம் இருந்தா அத டஸ்ட்பின்ல போட்டுவிடுங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா (Mahindra) அதன் வாகனங்களின் விலையை உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலையுயர்வு இன்று (ஏப்ரல் 14) முதலில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்துக் கொண்டிருக்கின்றது.

சில நாட்கள் ஓய்வெடுக்கும் விலை உயர்வு, திடீரென புத்துணர்வு பெற்று பல மடங்கு உயர தொடங்கிவிடுகின்றது. இதனால், சாமானிய மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கும் மேலும் கூடுதல் சுமையை அளிக்கும் வகையில் புதிய வாகனங்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே சுமார் 2.5 சதவீதம் வரை மஹிந்திரா விலை உயர்வைச் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. மஹிந்திரா அதிரடி செயலால் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை ரூ. 63 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

ஆகையால், மஹிந்திரா வாகன பிரியர்கள் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றனர். மிக சமீபத்தில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் விரைவில் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் விலை உயர்வுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விலை உயர்வு காரணமாக மஹிந்திரா வாகனங்களின் விலை ரூ. 10 ஆயிரம் தொடங்கி ரூ. 63 ஆயிரம் வரை உயர இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அதிர்ச்சியளிக்கும் செயலுக்கு அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் வாகன கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வே காரணம் என கூறப்படுகின்றது.

சமீப காலமாக வாகன கட்டமைப்பில் முக்கிய பங்களிக்கும் ஸ்டீல், அலுமினியம், பல்லடியம் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் கூடுதல் செலவீணத்தைச் சந்தித்து வருகின்றனர்.

தங்கள் மீது விழுந்திருக்கும் இந்த பாரத்தை மக்கள் மீது திருப்பிவிடும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றனர். அந்தவகையில், மாருதி சுஸுகி, டாடா மோட்டார் (வர்த்தக வாகன பிரிவு), ஹீரோ மோட்டோகார்ப், சுஸுகி மோட்டார்சைக்கிள்கள், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வு பற்றிய தகவலை அறிவித்திருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் 2.5 சதவீத விலையுயர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது மின்மயமாக்கலை மிக வேகமாக உள்வாங்க தொடங்கியிருக்கின்றது. அதாவது, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் மிக சமீபத்தில் நிறுவனம் உருவாக்கி வரும் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார்களின் டீசர் படங்களை அது வெளியிட்டது. வாகனங்களின் முழுமையான படங்களுக்கு பதிலாக பாகம்-பாகமாக தெரியும் வகையில் அந்த படங்கள் இருந்தன. அதேநேரத்தில், எதிர்கால மின்சார கார்களின் உட்புறம் எப்படி இருக்கும் என்பதையும் அந்த படங்கள் வெளிப்படுத்தின என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








