டெலிவரி துறைக்கான மஹிந்திராவின் பிரத்யேக எலெக்ட்ரிக் 3-வீலர்... இவ்ளோ கம்மியான விலைக்கா இத விக்க போறாங்க!..
மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (Mahindra Electric Mobility Limited) நிறுவனம் அதன் புதுமுக மின்சார கார்கோ ரக மூன்று சக்கர வாகனத்தை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா (Mahindra), மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் எனும் பெயரில் மின்வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த பிராண்டின்கீழ் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஓர் கார்கோ ரக மூன்று சக்கர வாகனத்தை அந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜோர் கிராண்ட் எலெக்ட்ரிக் (Zor Grand Electric) எனும் பெயரில் அவ்வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 3.60 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவரி சேவை நிறுவனங்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் இவ்வாகனத்தை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. அதேவேலையில், கணிசமான அளவு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனமாகவும் இந்த ஜோர் கிராண்டை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தியர்கள் மின்சார வாகனங்கள் மிக வேகமாக பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் இந்த ஜோர் கிராண்ட் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு ஏற்கனவே 12 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி லாகிஸ்டிக்ஸ் நிறுவனங்களான மேஜெண்டா இவி செல்யூஷன்ஸ், மோவிங், இவி நவ், யெலோ இவி, ஜிங்கோ உள்ளிட்டவர்களிடத்தில் இருந்தே அதிகளவில் புக்கிங்குகள் குவிந்துள்ளன. மஹிந்திரா நிறுவனம் இந்த மின்சார வாகனத்தை மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக உருவாக்கியுள்ளது. இதன் காரணத்தினாலேயே இப்போதே இவ்வாகனத்திற்கான புக்கிங் உச்சத்தை எட்ட ஆரம்பித்துவிட்டது.

10.24 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரீ என்று கூறக்கூடிய அளவிலான சூப்பரான 12 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவையே இந்த மஹிந்திரா ஜோர் கிராண்ட் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் 50 என்எம் டார்க் வரை வெளியேற்றும். 11.5 டிகிரி செங்குத்தான சாலைகளைக் கூட அசால்டாகக் கடக்க இந்த மோட்டார் உவதியாக இருக்கும்.

இதன் காரணத்தினாலேயே பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி என இந்த 12 கிலோவாட் மோட்டார் குறிப்பிடப்படுகின்றது. இதேபோல், இந்த வாகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் நல்ல ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என நிறுவனத்தால் கூறப்படுகின்றது.

அதேவேலையில், இதனை குறைந்த வேகத்தில் மற்றும் தேவையற்ற மின்சாதன பொருட்களை அனைத்து வைத்து பயன்படுத்துவதன் வாயிலாக 153 கிமீ வரை செல்லக் கூடிய வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பேட்டரிகைளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்களே போதுமானது. இதற்குள்ளாகவே 100 சதவீத சார்ஜை மஹிந்திரா ஜோர் கிராண்ட் எட்டிவிடும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடுதல் சிறப்பு வசதிகளாக மஹிந்திரா ஜோர் கிராண்ட் மூன்று சக்கர வாகனத்தில் டெலிமேட்டிக் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஜிபிஎஸ், ஆஃப்போர்டு சார்ஜர், கேபின் லைட், மொபைல் ஹோல்டர், லாக்கபிள் குளோவ் பாக்ஸ், ரிவர்ஸ் பஸ்ஸர், ஸ்பேர் வீல், ஹசார்டு இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை எலெக்ட்ரிக் ஆட்டோவை பயன்பாட்டை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதைவிட கூடுதல் சிறப்பு வசதி ஒன்றும் இந்த ஆட்டோவில் வழங்கப்பட்டிருக்கின்றது. பொதுவாக மூன்று சக்கர வாகனத்தில் வழங்கப்படும் கன்வென்ஷனல் கியர்பாக்ஸ் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மூன்று மோட்களுக்கான பொத்தான்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ரைடிங் ஸ்டைலை வழங்கும். ரிவர்ஸ், நியூட்ர் மற்றும் ஃபார்வார்டு ஆகிய மோட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சூப்பரான வசதிகளைக் கொண்ட மஹிந்திரா ஜோர் கிராண்ட் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். வெவ்வேறு விதமான அளவிலான பெட்டிகளையே இந்த வேரியண்டுகளில் மஹிந்திரா வழங்குகின்றது.

140 கன அடி, 170 கன அடி மற்றும் பிக்-அப் ஸ்டைல் பாடி ஆகிய தேர்வுகளிலேயே ஜோர் கிராண்ட் மின்சார ஆட்டோ விற்பனைக்குக் கிடைக்கும். இந்த வாகனத்திற்கு மஹிந்திரா நிறுவனம் 3 வருடங்கள் / 80 ஆயிரம் கிமீ வாரண்டியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இத்துடன், லித்தியம் அயன் பேட்டரிக்கு 5 வருடங்கள் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








