இனி பொலிரோ கார்களிலும் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்!! ஒருவழியாக வழங்கிய மஹிந்திரா...
மஹிந்திரா பிராண்டின் புதிய 'பட்டாம்பூச்சி' வடிவிலான லோகோ பொலிரோ மற்றும் பொலிரோ நியோ கார்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா & மஹிந்திரா அதன் பழைய ‘சாலை' டிசைனிலான லோகோவை புதிய பட்டாம்பூச்சி டிசைனிலான லோகோவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டில் மாற்றியது. மஹிந்திராவின் புதிய லோகோ புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால், அறிமுகத்தில் இருந்தே எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார்களில் புதிய மஹிந்திரா லோகோ தான் வழங்கப்பட்டு வருகிறது. மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களான ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்களிலும் புதிய லோகோ தான் வழங்கப்பட்டன.

இருப்பினும் மற்ற கார்களில் தனது பழைய லோகோவையே மஹிந்திரா நிறுவனம் பொருத்திவந்த நிலையில், சமீப மாதங்களாக ஒன்றன்பின் ஒன்றாக மஹிந்திரா கார்களில் புதிய ‘பட்டாம்பூச்சி' வடிவிலான லோகோ வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சமீபத்தில் மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார் மாடலும், எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவியியும் புதிய லோகோ உடன் டீலர்ஷிப் மையங்களில் காட்சி தந்திருந்தன.

அது தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. இருப்பினும் அதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ கார்களில் மஹிந்திராவின் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிராண்டின் புதிய லோகோ பொருத்தப்பட்ட பொலிரோ & பொலிரோ நியோ கார்களின் படங்கள் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மஹிந்திரா கார்களின் முன்பக்கத்தில் வழங்கப்படும் புதிய லோகோ, அதேநேரம் கார்களின் வீல் ஹப்கள், டெயில்லைட் மற்றும் உட்புற கேபினில் ஸ்டேரிங் சக்கரத்திலும் பொருத்தப்படுகின்றன.

பழைய மஹிந்திரா லோகோவை காட்டிலும், புதிய லோகோ பொலிரோ மற்றும் பொலிரோ நியோ கார்களுக்கு மிகவும் எடுப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொலிரோ நியோ காரின் மாடர்ன் ஸ்டைலை மேலும் மெருக்கூட்டும் விதமாக புதிய ‘பட்டாம்பூச்சி' வடிவிலான லோகோ விளங்குகிறது.

2000ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 22 வருடங்களாக விற்பனையில் உள்ள பொலிரோ எஸ்யூவி கார் இப்போதும் பலரது முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, அரசாங்க பயன்பாட்டிற்காகவே பொலிரோ கடந்த காலங்களில் இருந்து அதிகளவில் விற்பனையாகுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், உள்நாட்டு சந்தையில் மஹிந்திரா அதிகளவில் விற்பனை செய்யும் காராக பொலிரோ உள்ளது.

பொலிரோவிற்கு கிடைத்துவரும் தொடர் வரவேற்பினாலேயே, விற்பனை நிறுத்தப்பட்ட டியூவி300 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலுக்கு பொலிரோ நியோ என மஹிந்திரா நிறுவனம் பெயர் வைத்தது. இருப்பினும் தோற்றத்தில் பொலிரோ & பொலிரோ நியோ இரண்டும் வேறுப்படுகின்றன. பொலிரோ நியோ ஆனது டியூவி300-இன் தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.

மஹிந்திரா பொலிரோ காரில் 1.5 லிட்டர் எம் ஹாவ்க்75 டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 75 பிஎச்பி மற்றும் 210 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே, பொலிரோ நியோ காரில் சற்று ஆற்றல்மிக்க 1.5 லிட்டர் எம் ஹாவ்க்100 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு இந்த இரு டீசல் என்ஜின்களும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் வேறுப்பட்டாலும், இவற்றுடன் ஒரே மாதிரியாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் இணைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக வழக்கம்போல் பொலிரோ முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 8,246 பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 3,218 பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பொலிரோ கார்களின் விற்பனை ஆனது 156% அதிகரித்துள்ளது. மொத்தமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 29,516 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








