மஹிந்திரா எஸ்யூவி கார்களுக்கு திடீரென அதிகரித்துள்ள டிமெண்ட்!! பொலிரோவின் விற்பனை கூரையை பீய்த்து கொட்டுது!
முன்னணி உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா பிராண்டில் இருந்து சந்தையில் அனைத்து கார்களும் எஸ்யூவி உடலமைப்பிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனை சிறப்பான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, மஹிந்திரா பொலிரோவின் விற்பனை கடந்த மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மஹிந்திரா பிராண்டின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் பொலிரோ கடந்த மாதத்தில் மொத்தம் 11,045 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 பிப்ரவரி மாதத்தில் வெறும் 4,843 பொலிரோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பொலிரோவின் விற்பனை கடந்த மாதத்தில் சுமார் 128.06% அதிகரித்துள்ளது. 2022 பிப்ரவரியில் மொத்த மஹிந்திரா கார்கள் விற்பனையில் பொலிரோவின் பங்கு மட்டுமே 40.07% ஆகும்.

பொலிரோவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மஹிந்திரா தார் உள்ளது. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தாரின் இரண்டாம் தலைமுறை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து உச்சத்தில் இருக்கும் தாரின் விற்பனை கடந்த மாதத்தில் 5,072 யூனிட்களாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 2,842 யூனிட்கள் மட்டுமே தார் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இதன்படி பார்க்கும்போது, தாரின் விற்பனையும் கிட்டத்தட்ட 78.47% அதிகரித்துள்ளது. பொலிரோ, தார் மட்டுமின்றி மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடல்களின் விற்பனையும் வழக்கத்தை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மிக சிறப்பாகவே இருந்துள்ளன. இந்த வரிசையில் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள எக்ஸ்யூவி300 மற்றும் எக்ஸ்யூவி700 கார்கள் கடந்த மாதத்தில் முறையே 4,511 மற்றும் 4,138 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் எக்ஸ்யூவி700 ஆனது மஹிந்திராவின் சமீபத்திய மாடர்ன் 7-இருக்கை எஸ்யூவி காராகும். கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 தான் தற்போதைக்கு இந்திய சந்தையில் அதிகளவில் காத்திருப்பு காலத்தை கொண்டுள்ள கார் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்யூவி300 கடந்த ஆண்டு பிப்ரவரியில் 3,174 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்த வகையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை 42.12% அதிகரித்துள்ளது.

இவற்றிற்கு அடுத்து ஸ்கார்பியோ 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2021 பிப்ரவரி மாதத்தில் 3,532 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் இதனை காட்டிலும் 26.10% குறைவாக 2,610 ஸ்கார்பியோ கார்களே விற்கப்பட்டுள்ளன. இவ்வாறான விற்பனை குறைவை சமாளிக்கும் முயற்சியாக, புதிய தலைமுறை ஸ்கார்பியோவை வடிவமைக்கும் பணியில் ஏற்கனவே மஹிந்திரா இறங்கிவிட்டது.

புதிய ஸ்கார்பியோவின் அறிமுகத்தை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கிறோம். அதன்பின் மேலுள்ள மற்ற மாடல்களை போல் ஸ்கார்பியோ மாடலின் விற்பனையும் கூரையை பீய்த்து கொட்ட ஆரம்பிக்கும். இவை ஐந்தும் தான் தற்போதைக்கு மஹிந்திராவின் நம்பிக்கைக்குரிய மாடல்களாக உள்ளன. இவையில்லாமல் மராஸ்ஸோ, அல்டுராஸ் ஜி4, கேயூவி100 போன்ற வேறு சில கார்களையும் இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஆனால் இவற்றின் விற்பனை கடந்த பல மாதங்களாகவே பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகப்பட்சமாக மராஸ்ஸோ கடந்த மாதத்தில் 147 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் மராஸ்ஸோவின் விற்பனை 120 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 22.50% அதிகரித்துள்ளது. 2021 பிப்ரவரியாவது பரவாயில்லை, கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 1 யூனிட் மராஸ்ஸோ கார் கூட விற்பனை செய்யப்படவில்லை.

மராஸ்ஸோவிற்கு அடுத்து மஹிந்திராவின் சொகுசு வாகனமாக பார்க்கப்படும் அல்டுராஸ் ஜி4 27 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு எஸ்யூவி காரின் விற்பனையும் 2022 ஜனவரியில் 1 யூனிட் கூட பதிவாகவில்லை. ஆனால் 2021 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 36 அல்டுராஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. மஹிந்திராவின் ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக விளங்கும் இ-வெரிடோ கடந்த மாதத்தில் 12 யூனிட்களும், கேயூவி100 ஒரு யூனிட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் 27,563 கார்களை மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் இந்த நிறுவனம் இதனை காட்டிலும் சுமார் 79.21% குறைவாக 15,380 கார்களையே விற்பனை செய்திருந்தது. இவ்வளவு ஏன், கடந்த ஜனவரி மாதத்திலும் 19,860 யூனிட் கார்களின் விற்பனையையே மஹிந்திரா பதிவு செய்திருந்தது. இந்த வகையில் மாதம்-மாதம் ஒப்பிடுகையிலும் 38.79% உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








